இன்று நகர வீதிகளில் பவனி வருகிறது கோனியம்மன் தேர்

கோவை:கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, இன்று மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் சூழ கோலாகலமாக நடக்கிறது.

கோவையின் காவல்தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவில், தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த 10ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 18ம் தேதி, பூச்சாட்டு விழாவும் நடந்தது.

பிப்.,24 அன்று கிராமசாந்தி நிகழ்ச்சியும், கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. அன்றாடம் மேளதாளங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்கம்பத்தில், அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும், விநாயகர், சூலத்தேவர், அம்மன் கோவிலில் இருந்து சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது. பிப்.,26 முதல், புலி, கிளி, சிம்ம, அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

நேற்று இரவு அம்மனுக்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. வழக்கமான வைதீக முறைப்படி கலாசாரமும் பண்பாடும் மாறாமல், திருக்கல்யாண வைபவம் நடந்தது.

பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், மங்கல தாம்பூலம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் இன்று பகல் 2:05 மணிக்கு நடக்கிறது. ராஜவீதி தேர்நிலைத்திடலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட்டு, ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதி தேர்நிலையை அடைகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்று, கோனியம்மனின் அருளை பெற, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement