நகராட்சிகளில் வரி செலுத்த ஆன்லைன் பரிவர்த்தனை வசதியில்லாததால் அவதி

ராஜபாளையம்;
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் செயல்படும் வரி வசூல் மையங்களில் வரிகளை ஆன்லைனில் செலுத்தும் வசதி இல்லாததால் மக்கள் அவதியடைகின்றனர்.

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 25 மாநகராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சிக்கு சொத்து, தொழில், காலியிட வரி, பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட வருவாய் இனங்கள் மூலம் வரி வசூலிக்கப்படுகிறது.

நுாறு சதவீதம் வரி வசூல் செய்யும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு மத்திய நிதி குழு மானிய திட்டத்தில் ஆண்டுதோறும் நிதி வழங்கப்படுகிறது. இதில் சுகாதாரம், மின்விளக்கு, குடிநீர், சாலை உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொள்ள முடியும்.

மார்ச் இறுதிக்குள் நூறு சதவீதம் வரி வசூலிக்க அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் ஜன. முதல் வரி வசூல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இணையதளம் மூலம் நேரடியாக வரி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்ட பிறகும் சர்வர் பழுது, இணையதளம் தாமதம், ஒரிஜினல் ரசீது பெறுவதில் உள்ளிட்ட சிக்கல்களால் நேரடியாக வரி செலுத்துவதே நன்மை என மக்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் வரி வசூல் மையங்களில் யு.பி.ஐ., உள்ளிட்ட ஆன்லைன் முறையில் செலுத்த வழியின்றி ரொக்க பரிவர்த்தனை மட்டுமே அனுமதிக்கப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஜிபே, போன் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அனைவரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் ரூ.கோடிக்கணக்கில் வருவாய் தரும் வரிஇனங்களை டிஜிட்டலில் பெற வாய்ப்பு ஏற்படுத்தாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

Advertisement