பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி

ஹைதராபாத்; பிரபல பின்னணி பாடகி கல்பனா, 44, துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக கல்பனா பணியாற்றி வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று, ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.
தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே நிசாம்பத் நகரில் கல்பனா வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவரது வீடு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, கல்பனா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள், கல்பனாவை பரிசோதித்ததில், அவர் அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது.
தற்போது, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.