விசைத்தறி தொழில் பாதுகாப்பு எம்.பி., துரை வைகோவிடம் மனு

பல்லடம்:பல்லடம் அடுத்த, காரணம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த திருச்சி எம்.பி., துரை வைகோவிடம் விசைத்தறியாளர்கள் மனு அளித்தனர்.
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுசாமி மற்றும் பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாக குழுவினர், அவரிடம் அளித்த மனு விவரம்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், பல லட்சம் குடும்பங்களுக்கு விசைத்தறி தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. சமீப காலமாக, தானியங்கி மூலம், விசைத்தறி காடா துணி ரகங்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவதால், தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஏறத்தாழ, 30 சதவீத விசைத்தறிக்கூடங்கள் மூடப்பட்டு, தறி இயந்திரங்கள் பழைய இரும்புக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
விசைத்தறி தொழிலை பாதுகாக்க, ரக ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த, 2019, 2021 மற்றும் 2024ல் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது, ரக ஒதுக்கீடு செய்து தரப்படும் என, பா.ஜ., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை நிறைவேற்றவில்லை. கைத்தறி தொழிலை போல், விசைத்தறி தொழிலை பாதுகாக்க ரக ஒதுக்கீடு மிக அவசியம். பல லட்சம் விசைத்தறியாளர் குடும்பங்களை பாதுகாக்க, ரக ஒதுக்கீடு செய்து தர உதவ வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.