தண்ணீருக்கான வேட்பாளர் விவசாய சங்கம் அறிவிப்பு

பல்லடம்:வரும் 2026 சட்டசபை தேர்தலில், தண்ணீருக்கான பொது வேட்பாளரை நிறுத்துவோம் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து துவங்கும் பி.ஏ.பி., திட்டத்தின் மூலம் பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆளுங்கட்சியின் அரசியல் ஆதாயங்களுக்காக, பி.ஏ.பி., பாசன திட்டம் விதிமுறை மீறி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பாசன விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விவசாயம் நிறைந்த கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆனைமலையாறு - -நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த கால தேர்தல் பிரசாரத்தில், கட்சி வேறுபாடு இன்றி, அனைத்துக் கட்சித் தலைவர்களும், இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்தனர்.

வாக்குறுதிகள் அனைத்தும் இன்று வரை கானல் நீராகவே உள்ளது. தற்போதைய தமிழக அரசும், இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.

எனவே, இனி, அரசியல் கட்சிகளை நம்பி பயனில்லை என்பதால், 2026 சட்டசபை தேர்தலின் போது, தண்ணீருக்கான பொது வேட்பாளரை போட்டியிட வைக்கிறோம், என்றார்.

Advertisement