குமரகுரு கல்லுாரியில் நாளை 'யுகம் -2025'
கோவை:குமரகுரு கல்விக்குழுமங்களின் கீழ், மாணவர்கள் ஒருங்கிணைத்து நடத்தும், 'யுகம்-2025' விழா, நாளை துவங்கி 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும், மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் இந்நிகழ்வில், தொழில்நுட்பம், கலாசாரம், விளையாட்டு, இலக்கியம் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு கருத்தரங்கு, கலை விழா மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டில், யுகம் நிகழ்வுக்கு 'கும்பா' என்ற 'லோகோ' வை, நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்கள் அறிமுகப்படுத்தினர்.
நாளை துவங்கும் விழாவில், 33 தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகள், 21 கலாசார நிகழ்வுகள், 21 இலக்கிய நிகழ்வுகள், 15 கலை நிகழ்வுகள் நடக்கவுள்ளன. ஸ்டார்ட் அப் நிகழ்வுகளுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாளில், 70 அரங்குகளுடன் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், உணவு அரங்குகள், விளையாட்டு, வணிகம் போன்றவை இடம் பெறும். தவிர, மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு, மூத்த குடிமக்கள் பராமரிப்பு, பாலின சமத்துவம் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. தென் மாநில அளவில், பல்வேறு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.