வெல்லத்திலும் ரசாயனம் உணவு துறை கண்டுபிடிப்பு

1

பெங்களூரு: தினசரி உணவுப் பொருளான வெல்லத்திலும் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது, உணவுத் துறை நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இட்லி வேகவைக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில் புற்றுநோய் உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டன. இதைத் தொடர்ந்து மாநில உணவு துறை, இட்லி தயாரிக்க, பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்த தடை விதித்தது.

அதுபோன்று, கோடை காலம் துவங்கி உள்ளதால், தர்பூசணி பழங்களின் விற்பனை அதிகரித்து உள்ளது. இதிலும், பழத்தின் நிறத்தை கூட்ட, ஊசி மூலம் செயற்கை வண்ணம் பூசப்படுவதையும் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், தினமும் உணவில் பயன்படுத்தும் வெல்லத்திலும் கூட ரசாயனம் கலப்பது தெரிய வந்துள்ளது. கர்நாடகா முழுதும் உணவு துறை அதிகாரிகள் வெல்லத்தின் மாதிரிகளை சேகரித்தனர். இவை ஆய்வகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வின் முடிவில், வெல்லத்தில் தங்க நிறத்தை செயற்கை முறையில் உருவாக்க வண்ணப் பொருட்கள், சல்பர் டை ஆக்சைடு கலப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினசரி பயன்படுத்தும் மளிகை பொருட்கள், உணவு பொருட்களில் ரசாயனம் கலக்கப்படுவது ஒவ்வொரு ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டு வருவது, பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement