பெங்., - சென்னை சாலையில் பாதுகாவலர்கள் நிறுத்த முடிவு

கோலார்: திறக்கப்படாத சாலையில் நான்கு பேர் பலியான விபத்தை அடுத்து, இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில், இருமுனையிலும் பாதுகாவலர்களை நிறுத்த, தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.

பெங்களூரு - சென்னை இடையில் 'எக்ஸ்பிரஸ் வே' அமைக்கப்படுகிது. கர்நாடகாவில் பணிகள் முடிந்து விட்டன. ஹொஸ்கோட்டில் இருந்து தங்கவயல் பெமல்நகர் வரை வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இந்த சாலை அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவில்லை.

கடந்த 2ம் தேதி நள்ளிரவு எக்ஸ்பிரஸ் சாலையின், கோலார் குப்பனஹள்ளியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் இறந்தனர்.

இந்த சாலையில் பைக் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி பலர் பைக்கில் செல்கின்றனர். விபத்து எதிரொலியாக இனி பைக்குகள் செல்கிறதா என்று கண்காணிக்க, சாலையின் துவக்க, முடிவு முனையில் பாதுகாவலர்களை நிறுத்த தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.

இந்த வழியாக செல்லும் வாகனங்கள், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement