கார்கேவிடம் சிவகுமார் புகார்

பெங்களூரு: துணை முதல்வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவருமான சிவகுமார், பெங்களூரில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, நேற்று சந்தித்துப் பேசினார்.

மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான சிவகுமாருக்கு எதிராக, சில அமைச்சர்கள் பேசுகின்றனர். குறிப்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, சிவகுமாரை நேரடியாக விமர்சிக்கிறார்.

அது மட்டுமின்றி, மாநிலத் தலைவர் பதவிக்கும் அவர் குறிவைக்கிறார். இது தொடர்பாகவும் அவ்வப்போது பேசுகிறார். அதே போன்று முதல்வர், மாநிலத் தலைவர் மாற்றம் குறித்து சில அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் பேசி, கட்சியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் சிவகுமார் எரிச்சல் அடைந்துள்ளார். பல முறை எச்சரித்தும் பயன் இல்லை.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, பெங்களூரில் அவரது இல்லத்தில் நேற்று சிவகுமார் சந்தித்துப் பேசினார். உள்ளாட்சி தேர்தல் உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்து, இருவரும் ஆலோசித்தனர்.

அப்போது சிவகுமார், அமைச்சர் ராஜண்ணா உட்பட, கட்சியின் ஒழுங்கை மீறும் தலைவர்களை அடக்கி வைக்கும்படி, கார்கேவிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

Advertisement