சிவகுமார் - கன்னட திரையுலகினர் மோதல் விஸ்வரூபம்!: யஷ், சுதீப்புக்கு அவமரியாதை என குற்றச்சாட்டு

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா கடந்த 1ம் தேதி, விதான் சவுதா வளாகத்தில் துவங்கியது. இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் சிவகுமார், 'மேகதாது அணை கட்டும் திட்டத்திற்காக, சங்கமாவில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை நடத்தினோம்.
'ஆனால், கன்னட திரை உலகினர் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் மீது எனக்கு கோபம் உள்ளது. யார், யாருக்கு எங்கு நட், போல்ட் டைட் செய்ய வேண்டும் என்று, எனக்கு தெரியும்' என்றார்.
சிவகுமாரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கன்னட திரையுலகினரை, துணை முதல்வர் மிரட்டுவதாக, எதிர்க்கட்சி தலைவர்களும் பொங்கி எழுந்தனர். அதே நேரம், சிவகுமார் கருத்துக்கு, கன்னட திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
மூத்த இயக்குநர் ராஜேந்திர சிங்: கர்நாடகா, உங்கள் தாத்தா சொத்து இல்லை. பதவி, அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருக்க போவதும் இல்லை. கர்நாடகாவுக்கு 2,000 ஆண்டு பழமையான வரலாறு உள்ளது. சிவகுமாரால் 200 ஆண்டுகளா பதவியில் இருக்க முடியும்.
எனவே, சர்வாதிகாரி போன்று பேசுவது சரி இல்லை. கன்னட திரையுலகம் பற்றி பேசியதற்கு, அரசில் அங்கம் வகிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும். இங்கு எங்களை படம் இயக்க விடவில்லை என்றால், உத்தர பிரதேச மாநிலத்திற்கு செல்வோம். அங்கு 5 கோடி ரூபாய் மானியம் தருகின்றனர்.
நடிகர் சுதீப்பின் மேலாளரும், திரைப்பட எழுத்தாளருமான சக்ரவர்த்தி சந்திரசூட்:
சிவகுமாரின் பேச்சு சர்வாதிகாரி ஹிட்லரை போன்று உள்ளது. திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்படி எங்களுக்கு அழைப்பு வரவில்லை. நடிகர்கள் சுதீப், யஷ், உபேந்திராவுக்கும் அழைப்பு விடுக்காமல் அவமதித்து உள்ளனர்.
திரைப்பட அகாடமி தலைவர் சாது கோகிலா அரசியல்வாதியா, சினிமாக்காரரா என்று எனக்கு தெரியவில்லை. பெரிய நடிகர்களை அழைத்தால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வரும்.
எங்களால் சமாளிக்க முடியாமல் போகும் என்று, சாது கோகிலா கூறி உள்ளார். தவறு உங்கள் மீது இருக்கும் போது, எங்கள் மீது பழி போடுவது என்ன விதத்தில் நியாயம்.
தயாரிப்பாளர் கே.மஞ்சு:
நட், போல்டு சரி செய்ய வேண்டும் என்று சிவகுமார் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர் பேசும் ஸ்டைல் அப்படித்தான். கிராமத்தில் இப்படித்தான் பேசுவர். இதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ள வேண்டாம். கன்னட திரையுலகம் மீது சிவகுமாருக்கு நல்ல அபிப்ராயம் உண்டு.
ராஷ்மிகா மந்தனா குறித்து, எம்.எல்.ஏ., ரவிகுமார் கானிகா பேசி உள்ளார். இதுபற்றி நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். ஆனால் ராஷ்மிகா மந்தனா நல்ல பெண் தான். பான் இந்தியா திரைப்படங்களில் நடிக்கிறார்.
திரைப்பட அகாடமி தலைவர் சாது கோகிலா: திரைப்பட விழாவிற்கு நடிகர்களை சரியாக அழைக்கவில்லை என்று, என் மீது குறை சொல்கின்றனர். என்ன குறைபாடு என்று கூறினால், அதற்கு நான் பதில் அளிக்கிறேன். நட், போல்டு என்று சிவகுமார் பேசியதை விட்டுவிடலாம். நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற எண்ணத்தில் சிவகுமார் பேசி உள்ளார். நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம்.
காங்., - எம்.எல்.ஏ., ரவி கானிகா: மூத்த இயக்குனர் ராஜேந்திர சிங், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மூன்று ஆண்டுகள், திரைப்பட அகாடமி தலைவராக இருந்தார். அந்த காலத்தில், திரையுலகிற்கு அவரது பங்களிப்பு என்ன. தேவையின்றி அரசை விமர்சிப்பதை நிறுத்தி கொள்ளட்டும்.
இவ்வாறு பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து