குப்பை அள்ளும் பணியில் வேகம் தரம் பிரிப்பதில் ஏற்படும் தொய்வு
திருப்பூர்,:கிராம ஊராட்சிகளில் வீடுகளில் தேங்கும் குப்பைகள், நாள் கணக்கில் தேக்கமடைவதை தவிர்க்கவும், குடியிருப்புவாசிகள் பொது இடங்களில் குப்பைக் கொட்டுவதை தவிர்க்கவும், குப்பை சேகரிக்கும் பணி முறைபடுத்தப்பட்டுள்ளது; அதே நேரம், சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து அகற்றுவதில் தொய்வு தென்படுகிறது.
கிராம ஊராட்சிகளில், சொற்ப அளவிலான துாய்மைப்பணியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், வீடு, வீடாக சென்று குப்பை சேகரிப்பது, குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்பும் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, கிராம ஊராட்சிகளில் அமலில் இல்லை.
துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் இருந்து, தினசரி குப்பை சேகரிக்கப்படுவதில்லை; மாறாக, வாரம் ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள், குளம், குட்டை உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டப்படுகின்றன.
இந்நிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனரின் உத்தரவால் கிராம ஊராட்சிகளில், சுழற்சி முறையில் தினசரி குப்பை சேகரிக்கும் பணி, சில நாட்களக நடந்து வருகிறது. அதேநேரம், 'குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, அவற்றை அப்புறப்படுத்தும் திட்டத்தையும் அமல்படுத்தினால், ஊராட்சி பகுதிகளும் குப்பையில்லா நிலையை எட்டும்' என்கின்றனர் பொதுமக்கள்.