கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று துவக்கம்

திருப்பூர்:கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று, சாம்பல் புதன் நிகழ்வுடன் துவங்குகிறது.

கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஆண்டு தோறும் ஈஸ்டர் பெருநாளை, கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

அடுத்த மாதம், 20ம் தேதி ஈஸ்டர் கொண்டாடப்படும் நிலையில், அதற்கு தங்களை தயார்படுத்தும் விதமாக, 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பர்.

இன்று, சாம்பல் புதன் நிகழ்வுடன் தவக்காலம் துவங்குகிறது. தேவாலயங்களில் திருப்பலி நடத்தப்பட்டு, தேவாலய குருக்கள், பக்தர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை வரைவர்.

தொடர்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை, சிலுவைப்பாதை ஆராதனை நடக்கும். இதில் ஏசு கிறிஸ்து சிலுவை சுமந்து சென்று, அதில் அறையுண்டு இறந்தது தொடர்பான நிகழ்வை, பைபிளில் உள்ள வாசகங்களின் அடிப்படையில் தியானிப்பர்.

'இந்த தவக்கால நாட்களில் தங்களிடம் உள்ள கெட்ட பழக்க, வழக்கங்களை கை விடுவதுடன், நல் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்; உறவினர்கள், நண்பர்களுடன் பகைமை பாராட்டுவதை கைவிட்டு, அன்பு, சகோதரத்துவம், விட்டுக்கொடுத்து வாழும் பண்பை வளர்ப்பது, இல்லாதோர்க்கு இயன்ற வரை உதவுவது' உள்ளிட்ட நற்பண்புகளை வளர்க்கும் நோக்கில், தேவாலயங்களில் தியானம் மற்றும் ஆராதனை நடத்தப்படும்.

அடுத்த மாதம், 18ம் தேதி புனித வெள்ளி, 20ம் தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

Advertisement