கே.பி.எஸ்.சி.,யில் குளறுபடி: அசோக் காட்டம்

பெங்களூரு: கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நியமன தேர்வில் நடந்த குளறுபடி, சட்டசபையில் எதிரொலித்தது.

சட்டசபை கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசியதாவது:

கே.பி.எஸ்.சி.,யில் நடந்த நியமன தேர்வில் குளறுபடி நடந்துள்ளது. இதனால் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 30 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. கன்னட மொழிக்கு அவமதிப்பு நடந்துள்ளது.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய கே.பி.எஸ்.சி., குழப்பத்தின் கூடாரமாக மாறியுள்ளது. தேர்வை அவ்வப்போது தள்ளிவைத்து, குளறுபடி செய்கிறது. வினாத்தாள் தயாரிப்பதில், தவறுகள் நடக்கின்றன.

நேர்முக தேர்வு நடத்தி, இறுதி பட்டியல் வெளியிடுவதும் தாமதமாகிறது. இதனால் வேலை எதிர்பார்ப்போருக்கு தொந்தரவு ஏற்படுகிறது. அரசின் அரசியல் தலையீடு, ஊழல், பாரபட்சம் போன்ற அம்சங்கள், குழப்பங்களுக்கு முக்கிய காரணமாகும். இரண்டு லட்சம் பேர் வீதிக்கு வந்துள்ளனர்.

ஒவ்வொரு தேர்வுக்கும், 15 கோடி ரூபாய் செலவாகிறது. வறட்சி நிவாரணம், தொகுதி மேம்பாட்டுக்காக நிதியுதவி கேட்டு, நாங்கள் முதல்வரின் வீட்டுக்குச் செல்கிறோம்.

கே.பி.எஸ்.சி.,யில் இதே போன்று குழப்பம் நீடித்தால், எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வார்களோ தெரியாது. இது தொடர்பாக, விரிவாக விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

கே.பி.எஸ்.சி.,யில் நடக்கும் முறைகேடை எதிர்த்து, போராட்டம், சாலை மறியல் நடக்கிறது. சபாநாயகரும் கடிதம் எழுதியுள்ளார். கே.பி.எஸ்.சி., கன்னடத்தை கொல்கிறது.

சபாநாயகர் காதர்: இந்த விஷயத்தை, கவர்னர் உரை மீதான விவாதங்கள் நடக்கும்போது விவாதிக்க, அனுமதி அளிக்கப்படும்.

அசோக்: உங்கள் ஆலோசனையை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்த விஷயத்துக்கு, அரசிடம் தெளிவான பதில் கிடைக்காது. கவர்னர் உரை மீதான உரைக்கு, மொத்தமாக பதில் அளிக்கும். எனவே ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ், விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

சபாநாயகர்: ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்ட விஷயத்தை, விதிமுறை 69ன் கீழ் விவாதிக்க வாய்ப்பளிக்கப்படும்.

Advertisement