திருமணமான 6 மாதங்களில் இன்ஜினியர் தற்கொலை; வரதட்சணை காரணம்?

ஹைதராபாத்; காதல் திருமணம் செய்த ஆறு மாதங்களில், 35 வயது பெண் இன்ஜினியர் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த இன்ஜினியர்களான சதீஷ், தேவிகா ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். காதலித்து வந்த அவர்கள், பெற்றோரிடன் ஒப்புதலுடன் கடந்தாண்டு ஆகஸ்டில் திருமணம் செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கணவன், மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதைத் தொடர்ந்து, தன் அறைக்குள் சென்ற தேவிகா, கதவை உள்பக்கம் பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்கவில்லை. துாங்கியிருப்பார் என்று நினைத்து, கணவரும் துாங்கச் சென்றார்.

நேற்று காலையில் மீண்டும் கதவைத் தட்டியும் தேவிகா திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்துச் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸ் மற்றும் தேவிகாவின் பெற்றோருக்கு சதீஷ் தகவல் அளித்தார்.

இந்நிலையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தான், தேவிகா தற்கொலை செய்ததாக, அவருடைய பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement