புதிய அரசாணை வெளியிட தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டம், சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்தது.

பனியன் சங்க பொது செயலாளர் சம்பத் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., தலைவர் உன்னிகிருஷ்ணன், பனியன் பேக்டரி லேபர் யூனி யன் (ஏ.ஐ.டி.யு.சி.,) பொது செயலாளர் சேகர், செயலாளர் செந்தில்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள், ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், பூபதி (எல்.பி.எப்.,), சிவசாமி, பெருமாள் (ஐ.என்.டி.யு.சி.,) குமார் ( ஏ.டி.பி.,), முத்து சாமி (எச்.எம்.எஸ்.,), சம்பத், மனோகரன், (எம்.எல்.எப்.,) பங்கேற்றனர்.

பனியன் தொழிலாளர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய அறிவிப்பு வந்துள்ளது முறையானது அல்ல மற்றும் ஏற்கத்தக்கதும் அல்ல. விலைவாசி உயர்வு குறித்து கவலைப்படாமல், சம்பளம் நிர்ணயித்துள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.

நடைமுறை சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், குறைந்தபட்ச ஊதியம், மிக குறைவாக நிர்ணயித்துள்ளனர். குறைந்தபட்ச ஊதியத்துக்கான குழுக்கள் கூட்டம் நடைபெறவில்லை. தொழிற்சங்கங்களிடமும் கருத்தும் கேட்கவில்லை.

எவ்விதமான கருத்தும் கேட்காமல், அதிகாரிகள் அறிவித்திருக்கிற ஊதியம், தொழிலாளர் பெற்றுவந்த ஊதியத்தை காட்டிலும், மாதம், 1,700 ரூபாய் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, பனியன் தொழிலாளருக்கான சம்பள நிர்ணய அரசாணையை ரத்து செய்துவிட்டு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ற சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

அரசாணையில் அதிர்ச்சி



கடந்த, 2024ல் வெளியிட்ட, உத்தேச அறிவிப்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சபடி, 161மேல் உயரும் புள்ளிகளுக்கு, 28 பைசா என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை மாற்றி, 196 புள்ளிகள் என உயர்த்தி, 23 பைசா என்று குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை எவ்வகையிலும் ஏற்கமாட்டோம்.

நியாயமான சம்பளம் நிர்ணயிக்க கோரி, தமிழக முதல்வர், தொழிலாளர்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடிதம் அளிப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறைந்தபட்ச சம்பள நிர்ணய அரசாணையால், தொழிலாளர்களுக்கு பல்வேறு பாதிப்பு ஏற்படும். அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு லட்சம் துண்டறிக்கை அச்சடித்து, மாவட்டம் முழுவதும் தொழிலாளிக்கு வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 18ம் தேதி அனைத்து சங்கங்களின் முன்னணி ஊழியர்கள் பங்கேற்கும் ஊழியர் கூட்டத்தை நடத்தி, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement