'2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர்., ஆட்சி'

ஊத்தங்கரை: 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றால், எம்.ஜி.ஆர்., ஆட்சி வரும்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் நாயக்கனுார், அத்திப்பாடி, நடுப்பட்டி, பாவக்கல், அனுமன்தீர்த்தம், புதுார் உள்ளிட்ட, பஞ்சாயத்துக்களில், அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தெற்கு ஒன்றிய செயலாளர் வேங்கன் தலைமையில் நேற்று நடந்தது.


இதில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில், ''வரும், 2026 சட்டசபை தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலுான்ற நினைக்கின்றன. திராவிட கட்சிகளில் செல்வாக்கான தலைவர்கள் இல்லை. 31 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த மிக பெரிய கட்சி, அ.தி.மு.க.,தான். 2026 ல், அ.தி.மு.க., வெற்றி பெற்றால், எம்.ஜி.ஆர்., ஆட்சி வரும்,'' என்றார்.

இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம், மாவட்ட துணை செயலாளர் சாகுல்அமீது, ஒன்றிய கழக செயலாளர்கள் வடக்கு வேடி, மத்திய சாமிநாதன், நகர செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement