வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை என்ன? அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகத்துறை, நீர்வளத்துறை, நடந்தாய் காவேரி உள்பட பல்வேறு துறை சார்ந்த திட்ட பணிகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாநகராட்சி தலைமை பொறியாளர் செல்வநாயகம் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், காங்கயம் சட்டசபை ெதாகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள், நகராட்சி பகுதிகளில் சாலை சீரமைப்பு, சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணி, வடிகால் பணி, கால்வாய் மேம்பாட்டு பணிகள்.

நீர்வளத்துறை சார்பில், காங்கயத்தில் ஓடையில் அமைந்துள்ள தடுப்பணை புணரமைக்கும் பணி, குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டும் திட்டம்; நடந்தாய் காவேரி திட்டம் தொடர்பாக தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்னைகளுக்கு தமிழக முதல்வர் முன்னுரிமை அளித்து வருகிறார். அதற்கு அரசு அலுவலர்கள் உறுதுணையாக செயல்படவேண்டும். அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில் பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement