திருத்தணியில் வரி செலுத்தாத காலிமனைகள் வரும் 15க்குள் செலுத்த தவறினால் கையகப்படுத்த திட்டம்

திருத்தணி, திருத்தணி நகராட்சியில் காலிமனைகளின் உரிமையாளர்கள், வரும் 15க்குள் வரிசெலுத்த வேண்டும் என, விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர். தவறும் பட்சத்தில், நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், காலிமனை உரிமையாளர்கள் வரி செலுத்தி மனைகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 13,710 வீடுகள், 1,230 வணிக வளாகங்கள் உள்ளன. இதில், 1,590 வீட்டு உரிமையாளர்கள் மட்டும் குடிநீர் பெறுவதற்கு முன்வைப்பு தொகை செலுத்தி வீடுகளுக்கு பெறுகின்றனர்.
குறுந்தகவல்
மீதமுள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு, நகராட்சி நிர்வாகம் தெருக்குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்கிறது. தற்போது, நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, தொழில் உரிமம், நகராட்சி கடைகளுக்கு குத்தகை என, ஆண்டுக்கு, 6.35 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இந்த நிதியின் வாயிலாக, நகராட்சி மக்களின் குடிநீர், கால்வாய், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இம்மாதத்திற்குள் நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் காலிமனை வரி, தொழில் உரிமம், கடைகளுக்கு குத்தகை பணம் கட்டுவது உள்ளிட்ட வரிகள் முழுமையாக செலுத்த வேண்டும்.
நகராட்சி வருவாய் ஆய்வாளர் தலைமையில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரு மாதங்களாக வரி செலுத்தாதவர் பட்டியல் தயாரித்து, வீடுகளுக்கு நேரில் சென்றும், மொபைல்போன் வாயிலாக குறுந்தகவல் அனுப்பியும் வரி இனங்கள் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நகராட்சியில் காலிமனை வரி செலுத்தாமல், 2,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களில் வசித்து வருவதால், காலிமனையின் உரிமையாளர்களை சந்தித்து வரி வசூலிப்பதில் ஊழியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் காலிமனை வரி வசூலிப்பதில் அதிகளவில் தீவிரம் காட்டி வருகிறது.
முதற்கட்டமாக, நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கூறப்பட்டுள்ளதாவது:
காலிமனை உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய காலிமனை வரியை நிலுவை வைத்துள்ளனர். இந்த நிலுவை காலிமனை வரி தொகையை நகராட்சி கருவூலத்தில் அல்லது நகராட்சி இணையதளமான https://tnurbanepay@tn.gov.in வாயிலாக செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நடவடிக்கை
தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 விதி 269ன் கீழ், தங்களது காலிமனை நகராட்சி வசம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, நகராட்சியில், 30க்கும் மேற்பட்ட இடத்தில் பேனர்கள் வைத்து உரிமையாளர்களுக்கு காலிமனை வரி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், மொத்தம் 2,699 காலிமனைகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த காலிமனைகளுக்கு, 78 லட்சம் ரூபாய் வரியாக செலுத்த வேண்டும் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன்
இதில், ஒரு சிலர் மட்டுமே காலிமனைகளுக்கு வரி செலுத்தி உள்ளனர். பெரும்பாலானோர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால், 'காலிமனைகள் முன், கட்டாயம் வரி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், தங்களது காலிமனை கையகப்படுத்தப்படும்' என, பேனர் வைத்து எச்சரித்துள்ளோம்.
இம்மாதம், 15ம் தேதிக்குள் காலிமனை உரிமையாளர்கள் வரி செலுத்த வேண்டும். தவறினால், உரிமையாளர்களுக்கு நான்கு முறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, அந்த காலிமனையை நகராட்சி நிர்வாகம் சார்பில் கையகப்படுத்தப்படும்.
வரி செலுத்தாமல் வீடுகள் கட்டுவதற்கும், விற்பனை செய்வதற்கும் நகராட்சி அனுமதி வழங்கப்பட மாட்டாது. எனவே, காலிமனை உரிமையாளர்கள், ஏழு நாட்களும் நகராட்சியில் இயங்கி வரும் அலுவலக வசூல் மையத்தில் வரி செலுத்தலாம். 'ஆன்லைன்' வாயிலாகவும் வரி செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சியில் உள்ள காலிமனைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு சதுரடிக்கு, 40, 60 மற்றும் 80 பைசா வீதம் வரி வசூலிக்கப்படுகிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை காலிமனை வரி செலுத்த வேண்டும். முதன் முதலில் காலிமனை வரி நிர்ணயம் செய்யும் போது, வரி தொகை ஆறரை ஆண்டுக்கு கணக்கீட்டு தொகை பெறப்படும். ஒருவர் பத்திரப்பதிவு செய்து, 20 ஆண்டுகள் அல்லது ஓராண்டு ஆனாலும், ஆறரை ஆண்டுக்கான காலிமனை வரி கட்டாயம் செலுத்த வேண்டும். இந்த காலிமனை வரி, 2022ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.- டி.நரசிம்மன்,வருவாய் ஆய்வாளர், திருத்தணி.
மேலும்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
-
வரி செலுத்தாத 2 நிறுவனங்களை இழுத்து மூடியது குடிநீர் வாரியம்
-
50 ஆயிரம் விடுதி மாணவருக்கு உணவு கட்டணம் வழங்காமல் இழுத்தடிப்பு; பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு