பணி நேரம் முடியும் வரை மருத்துவர்கள் இருக்க அறிவுரை

பழவேற்காடு, மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர், ஏ.ரெட்டிப்பாளையம், வாயலுார் ஊராட்சிகளில் கலெக்டர் பிரதாப், ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

காட்டூர் ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் திட்டப்பணிகளை பார்வையிட்டார். பயனாளிகளிடம், வீடு கட்டுவதற்கான நிதி உரிய நேரத்தில் கிடைக்கிறதா என கேட்டறிந்தார். பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதே கிராமத்தில், மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், 25 லட்சம் ரூபாயில், அய்யனார்குளம் - அபிராபிநகர் இடையே மேற்கொள்ளப்படும் சாலை பணிகளை பார்வையிட்டார்.

அங்கு சாலைகள் தரமாகவும், உரிய அளவீடுகளுடன் உள்ளதா என சரிபார்த்தார். சோமஞ்சேரி கிராமத்தில், 19 கோடி ரூபாயில் ஆரணி ஆற்றின் கரையோரங்களில் அமைந்து வரும் வெள்ள தடுப்புச்சுவர் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பழவேற்காடு அரசு மருத்துவனையில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டவர்களின் வருகை பதிவேடுகள், புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, மருத்துவ கழிவுகளை சேமித்து வைக்கும் அறை, மருந்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

நோயாளிகள் பயன்படுத்தும் கட்டில்கள் மீது போடப்படும் துணி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்தார். பின், மருத்துவர்கள் பணிக்கு வந்தால், பணி நேரம் முடியும் வரை கட்டாயம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Advertisement