பிளாட்பாரத்தில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்; உரியவரிடம் ஒப்படைத்த போலீசுக்கு குவியுது பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய், லேப்டாப் ஆகியவற்றை, மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மாடசாமி கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், புதிய பஸ் நிலையத்தில், மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மாடசாமி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பஸ் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த பையிலிருந்து ரூ.1,42,396 மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை, மாடசாமி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு பையை உரிமை கோரி வந்த தென்காசி மாவட்டம், வீராணத்தை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் விசாரணையில் பணம், மடிக்கணினி பேச்சிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
நேர்மையான முறையில் பணத்தை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மாடசாமியை, பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். மாடசாமியை காவல் துணை கமிஷனர்கள் கீதா, வினோத் சாந்தாராம், விஜயகுமார் மற்றும் மேலப்பாளையம் குற்றப்பிரிவு எஸ்.ஐ., ரசிதா ஆகியோர் பாராட்டினர்.







