ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து

சென்னை: இந்தியாவின் சரத் கமல், டேபிள் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்தார்.
இந்தியாவின் 'நம்பர்-1' டேபிள் டென்னிஸ் வீரர் அஜந்தா சரத் கமல் 42. கடந்த 1982ல் சென்னையில் பிறந்தவர். தனது 4வது வயதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் களமிறங்கினார்.
ஆந்திராவில் 2002ல் நடந்த தேசிய விளையாட்டில் ஒரு வெள்ளி (அணி), இரண்டு வெண்கலம் (ஒற்றையர், கலப்பு இரட்டையர்) என 3 பதக்கம் வென்றார் சரத் கமல். பின் 2003ல் முதன்முறையாக சீனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் 10 முறை பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் நடந்த காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (2004) ஒற்றையரில் தங்கம் வென்றார் சரத் கமல். இது, சர்வதேச அரங்கில் ஒற்றையர் பிரிவில் இவர் கைப்பற்றிய முதல் பதக்கமானது. அதன்பின் டேபிள் டென்னிஸ் போட்டியில் உச்சத்தை எட்டிய இவர், 2004ல் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றார்.


கடந்த 2010ல் நடந்த எகிப்து ஓபன் ஒற்றையரில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சரத் கமல், ஐ.டி.டி.எப்., புரோ டூர் பட்டம் வென்ற முதல் இந்தியரானார். காமன்வெல்த் விளையாட்டு (7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்), ஆசிய விளையாட்டு (2 வெண்கலம்), ஆசிய சாம்பியன்ஷிப் (4 வெண்கலம்) அரங்கில் பதக்கங்களை வென்று குவித்தார். ஐந்து முறை (2004, 2012, 2016, 2020, 2024) ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவரால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. பாரிஸ் ஒலிம்பிக் துவக்க விழா அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடி ஏந்தி வந்தார்.

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த சரத் கமலுக்கு, நாட்டின் உயரிய அர்ஜுனா (2004), பத்ம ஸ்ரீ (2019), 'கேல் ரத்னா' (2022) விருது வழங்கப்பட்டன.

சென்னையில், வரும் மார்ச் 25-30ல் டபிள்யு.டி.டி. 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடருடன் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறார் சரத் கமல்.

சரத் கமல் கூறுகையில், ''டேபிள் டென்னிசை விட்டு முழுமையாக விலகுகிறேன் என்று கூறவில்லை. போட்டிகளில் மட்டும் பங்கேற்க மாட்டேன். எனது ராக்கெட் ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. இந்த விளையாட்டின் மூலம் நிறைய மகிழ்ச்சி, அன்பு, வலி, பாடம் கிடைத்தது. அனைவருக்கும் நன்றி,'' என்றார்.


சென்னையில் கடைசி...


சரத் கமல், தனது முதல் சர்வதேச போட்டியை சென்னையில் விளையாடினார். தற்போது, இவரது கடைசி போட்டியும் சென்னையில் நடக்க உள்ளது.

Advertisement