ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்



கேதார்நாத், ஹேம்குண்ட் ஷாகிப் குருத்வாரா புனித தலங்களில், 6,800 கோடி ரூபாய் மதிப்பில் 'ரோப் கார்' வசதி அமைக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஹிந்துக்களின் புனித தலமான கேதார்நாத்தில், ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

தனியார் பங்களிப்பு

ஏப்., - மே -மாதத்தில் அட்சய திரிதியை தினம் துவங்கி, அக்., - நவம்பரில் தீபாவளி வரை கோவில் திறந்திருக்கும். 11,968 அடி உயரத்தில் பனி சூழ்ந்த மலை மீது இருக்கும் கேதார்நாத் கோவிலுக்கு, கவுரிகுண்டில் இருந்து 16 கி.மீ., துாரம் மலை மீது நடந்தும், ஹெலிகாப்டரிலும் பயணம் செய்ய வேண்டும்.

இந்நிலையில், கேதார்நாத் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த தகவலை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதையடுத்து, 4,081.28 கோடி ரூபாய் செலவில், சோன் பிரயாக் - -கேதார்நாத் இடையே 12.9 கி.மீ., துாரத்துக்கு தனியார் பங்களிப்புடன் ரோப் கார் அமைக்கப்படுகிறது.

அதிவேக காற்று மற்றும் கடுங்குளிரை தாங்கும் வகையில் அமைக்கப்படும் ரோப் காரில், ஒரு மணி நேரத்துக்கு 1,800 பேர் வீதம், நாள் ஒன்றுக்கு 18,000 பேர் பயணிக்கலாம்.

தற்போது ஒன்பது மணி நேரம் வரையாகும் பயண நேரம், வெறும் 36 நிமிடங்களாக குறையும்.

இதே போல், உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஹேம்குண்ட் ஷாகிப் குருத்வாராவுக்கும் 2,730 கோடி ரூபாய் செலவில் ரோப் கார் திட்டத்தை அமைக்க, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1,100 பேர்

சீக்கிய குரு கோவிந்த் சிங் நினைவாக அமைந்துள்ள இந்த குருத்வாரா, 15,000 அடி உயரத்தில், ஏழு மலை முகடுகளுக்கு மத்தியில் பனி பிரதேசத்தில் உள்ளது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை திறந்திருக்கும்.

கோவிந்த் காட்டில் இருந்து 21 கி.மீ., துாரத்துக்கு கடுமையான மலைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இதை தவிர்க்கும் வகையில், 12.4 கி.மீ., துாரத்துக்கு, மணிக்கு 1,100 பேர் பயணிக்கும் வகையில் ரோப் கார் அமைக்கப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement