பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு முன்னேறியது நியூசிலாந்து. நேற்று நடந்த அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற நியூசிலாந்தை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர், பேட்டிங் தேர்வு செய்தார்.
ரச்சின் அபாரம்
நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவிந்திரா, வில் யங் ஜோடி துவக்கம் கொடுத்தது. யங் 21 ரன்னில் அவுட்டானார். பின் ரச்சின், அனுபவ வில்லியம்சன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். யான்சென் வீசிய 7வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார் ரச்சின். தொடர்ந்து மல்டர் (18வது) ஓவரிலும் 3 பவுண்டரி விளாசினார்.
ரபாடா பந்தில் 2 ரன் எடுத்த ரச்சின், இத்தொடரில் இரண்டாவது சதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 164 ரன் சேர்த்த போது, ரபாடா பந்தில் ரச்சின் (108) அவுட்டானார்.
வில்லியம்சன் சதம்
மறுபக்கம் சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்தார் வில்லியம்சன். முல்டர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், 91வது பந்தில் சதம் கடந்தார். வில்லியம்சன் 102 ரன்னில் அவுட்டானார். டாம் லதாம் (4), ரபாடா பந்தில் போல்டானார். நிகிடி வீசிய 45வது ஓவரில் 6, 4, 4 என தொடர்ந்து விளாசினார் மிட்செல். யான்சென் (46வது) ஓவரில் பிலிப்ஸ், தொடர்ந்து 4 பவுண்டரி அடிக்க, ஸ்கோர் 300 ஐ கடந்தது.
பின் மிட்செல் (49), பிரேஸ்வெல் (16) அவுட்டாகினர். கடைசி 10 ஓவரில் 110 ரன் சேர்த்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 362/6 ரன் குவித்தது. பிலிப்ஸ் (49), சான்ட்னர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
துசென் நம்பிக்கை
கடின இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு ரிக்கிள்டன் (17), கேப்டன் பவுமா ஜோடி துவக்கம் சுமார் துவக்கம் தந்தது. பின் பவுமா, வான் டர் துசென் இணைந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுமா அரைசதம் அடித்தார். இவருக்கு கைகொடுத்த துசென், 51 வது பந்தில் அரைசதம் எட்டினார்.
சான்ட்னர் கலக்கல்
இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்த போது, சான்ட்னர் சுழலில் பவுமா (56) வெளியேறினார். தொடர்ந்து மிரட்டிய இவர், துசெனை (69) போல்டாக்க, தென் ஆப்ரிக்க அணி தோல்விப் பாதைக்கு திரும்பியது. அடுத்த சில நிமிடத்தில் பெரிதும் நம்பப்பட்ட கிளாசனை, 3 ரன்னில் திருப்பி அனுப்பினார் சான்ட்னர்.
மார்க்ரம் 31 ரன் எடுக்க, போராடிய மில்லர் (100) சதம் அடித்தார். மற்றவர்கள் ஏமாற்றினர். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 312/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி பைனலுக்கு முன்னேறியது.

இந்தியாவுடன் மோதல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனல், மார்ச் 9ல் துபாயில் நடக்க உள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி, ஏற்கனவே நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.

ஐந்தாவது முறை
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஐந்தாவது முறையாக (2000, 2002, 2006, 2013, 2025) அரையிறுதியுடன் வெளியேறியது தென் ஆப்ரிக்கா. முன்னதாக 1998ல் மட்டும் சாம்பியன் ஆனது.

2009க்குப் பின்...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணி இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதற்கு முன் 2009ல் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.

முதல் வீரர்
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் அரங்கில் தொடர்ந்து மூன்று போட்டியில் சதம் விளாசிய முதல் வீரர் ஆனார் வில்லியம்சன். இவர் 2019ல் 106, 2025ல் 133, 102 ரன் எடுத்தார்.
* எந்த ஒரு அணிக்கு எதிராகவும் இதுபோல சாதனை படைத்த முதல் நியூசிலாந்து வீரர் ஆனார்.

362/6 ரன்
நேற்று 362/6 ரன் குவித்த நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி நாக் அவுட் போட்டியில் அதிக ரன் எடுத்த அணியானது. முன்னதாக 2017 பைனலில் பாகிஸ்தான், 338/4 ரன் (எதிர்-இந்தியா) எடுத்திருந்தது.
* ஐ.சி.சி., ஒருநாள் தொடர் 'நாக் அவுட்' போட்டிகளில் எடுக்கப்பட்ட மூன்றாவது அதிக ஸ்கோர் ( நியூசி., 362/6) இது. முதல் இரு இடத்தில் இந்தியா எடுத்த 397/4 (2023 உலக கோப்பை, எதிர்-நியூசி.,), நியூசிலாந்தின் 393/6 ரன் (2015 உலக கோப்பை, எதிர்-வெ.இண்டீஸ்) உள்ளன.
* சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலில் களமிறங்கிய அணி எடுத்த அதிகபட்ச ரன் (362/6) இது ஆனது. இதற்கு முன் இங்கிலாந்து 351/8 ரன் (2025, எதிர்-ஆஸி.,) எடுத்திருந்தது.

5 சதம்
ஐ.சி.சி., தொடரில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் ஆனார் ரச்சின் ரவிந்திரா. இவர் 2023 உலக கோப்பை தொடரில் 3, சாம்பியன்ஸ் டிராபியில் 2 என மொத்தம் 5 சதம் அடித்துள்ளார். வில்லியம்சன் (4), நாதன் ஆஷ்லே (3) அடுத்து உள்ளனர்.
* குறைந்த வயதில் 5 ஒருநாள் சதம் அடித்த நியூசிலாந்து வீரர்களில் வில்லியம்சனுக்கு (24 வயது, 165 நாள்) அடுத்த இடம் பெற்றார் ரச்சின் (25 வயது, 107 நாள்).
* ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 5 சதம் அடித்த இரண்டாவது நியூசிலாந்து வீரர் ரச்சின் (28). கான்வே (22) முதலிடத்தில் உள்ளார்.

முதல் அணி
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக சதம் அடித்த அணியானது நியூசிலாந்து (2025ல் 5). வெஸ்ட் இண்டீஸ் (2006ல் 4), ஆஸ்திரேலியா (2009ல் 3), வங்கதேசம் (2017ல் 3), இந்தியா (2002ல் 3) அடுத்து உள்ளன.

Advertisement