இடையூறாக உள்ள கம்பம், மின்மாற்றிகளால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இடையூறு கம்பம், மின்மாற்றிகளால் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு

பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில், மீஞ்சூர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பஜார் பகுதியானது, மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
இங்கு மளிகை, துணி, உணவகம், காய்கறி என, 900க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மீஞ்சூரை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் வியாபார மையமாக உள்ளது.
இங்குள்ள வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் தங்களது விற்பனைக்காக, சாலையை ஆக்கிரமித்துள்ளனர். விளம்பர பலகைகள், விற்பனை பொருட்கள், ஸ்டால்கள் வைத்து இருப்பதால், சாலையில் சென்று வரும் வாகனங்களுக்கு பெரும் இடையூறாக அமைகிறது.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள சமையல் எரிவாயு முனையங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், நிலக்கரி கிடங்கு, காட்டுப்பள்ளி எண்ணுார் துறைமுகம், அதானி துறைமுகம், எல்.என்.டி., கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், ஆக்கிரமிப்புகளால் சிரமத்துடன் பயணிக்கின்றன.
காலை - மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, போக்குவரத்து போலீசாரின் ஆலோசனையின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.
இதையடுத்து, பொன்னேரி நெடுஞ்சாலைத் துறையினர், சாலையின் எல்லைகளை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து அகற்றும்படி வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில், நேற்று வருவாய், காவல் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு முகாமிட்டனர். 'பொக்லைன்' இயந்திரத்தின் உதவியுடன், வணிக வளாகங்களில் இருந்து, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சிமென்ட் ஓடு வேய்ந்த கூரைகள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
இதுதான் சாலையின் எல்லை என உரிய அளவீடுகள் செய்து தரவில்லை. உரிய அவகாசம் வழங்கவில்லை.
கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், சாலையின் இருபுறமும் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் வாகனங்களுக்கு இடையூறாக உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, இவை தனியாக சாலையில் நிற்கும். இதனால் விபத்துக்கள் ஏற்படும். மின்கம்பங்கள், மின்மாற்றிகளை இடமாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதை தொடர்ந்து, அதிகாரிகள் மின்வாரியத்திடம் தெரிவித்து கம்பங்கள், மின்மாற்றிகளை இடமாற்றம் செய்தவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அதன்பின், வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த விளம்பர பலகைகள், ஸ்டால்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை, 'நோட்டீஸ்' வழங்கவில்லை. திடீரென அகற்றுவது வியாபாரிகளுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் ஒத்துழைக்கிறோம். அதேசமயம் நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் கம்பங்கள், மின்மாற்றிகள் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளன. அவற்றை நகர்த்தி அமைக்காமல், கடைகளின் ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றுவது பயன்தராது. ஆண்டுக்கு ஒருமுறை நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், அடுத்த சில நாட்களில் மீண்டும் தொடர்வதும் வாடிக்கையாக உள்ளது. நிரந்தர தீர்வு வேண்டுமானால், சாலையின் எல்லையை வரையறுத்து மின்கம்பம் மற்றும் மின்மாற்றிகளை மாற்று இடத்தில் பொருத்த வேண்டும்.
-- டி.ஷேக் அகமது,
செயலர், மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம்
சாலை விரிவாக்கம், புதிய வழித்தடம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்போது மட்டுமே முறையான அறிவிப்பாணை வழங்கப்படும். இது போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கான நடவடிக்கை. வியாபாரிகளுக்கு ஒலிபெருக்கி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உள்ளோம். அதன்பின், மீண்டும் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருப்பின் எந்தவொரு அறிவிப்பும் இன்றி அகற்றப்படும். மேலும், மின்வாரியத்திற்கும் கடிதம் அளிக்க உள்ளோம்.
-- நெடுஞ்சாலைத்துறை அதிகாரி,
மீஞ்சூர்.
மேலும்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
-
50 ஆயிரம் விடுதி மாணவருக்கு உணவு கட்டணம் வழங்காமல் இழுத்தடிப்பு; பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு
-
தொழில் உரிமம் புதுப்பிக்க மும்மடங்கு கமிஷன் கேட்டு மிரட்டல்; மாநகராட்சி அதிகாரிகள் மீது வணிகர்கள் குற்றச்சாட்டு