கோலி, ரோகித் ஓய்வு பெற வேண்டாம் * 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டுகோள்

புதுடில்லி: ''வரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கோலி, ரோகித் பங்கேற்க வேண்டும். இப்போதைக்கு ஓய்வு பெற வேண்டாம்,'' என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 37, சீனியர் வீரர் கோலி 36. கடந்த 2024 ல் உலக கோப்பை வென்றவுடன், சர்வதேச 'டி-20' அரங்கில் இருந்து விடைபெற்றனர். சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஏமாற்றியதால், மீண்டும் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.
தவிர, 2027 ஒருநாள் உலக கோப்பை, 2025-2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அணியை கட்டமைக்கும் வகையில், இருவரும் ஓய்வு பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் ஏற்கனவே கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இப்போட்டியுடன் இருவரும் ஒருநாள் அரங்கில் இருந்து விடைபெறலாம்.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறுகையில், ''ரோகித், கோலி ஓய்வு குறித்து தான் எல்லோரும் பேசி வருகின்றனர். தயவு செய்து அவர்களை தொடர்ந்து விளையாட விடுங்கள். அடுத்து 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், மீண்டும் கிரிக்கெட் இடம் பெற்றுள்ளது. இதில் இந்தியா பதக்கம் வெல்ல வேண்டும்.
ஒலிம்பிக் வீரர்களாக ரோகித்தும், கோலியும் இந்தியாவுக்கு பதக்கம் வெல்வதைப் போல, வேறு எதுவும் சிறந்தது இருக்காது,'' என்றார்.