பழுதான சமுதாய கூட கட்டடம் பழுதுநீக்க பகுதியினர் கோரிக்கை

திருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் ஊராட்சி அருந்ததியர் காலனியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று 30 ஆண்டுகளுக்கு முன் 100 பேர் அமரும் வகையில் நவீன சமுதாய கூடம் கட்டடப்பட்டது.

இந்த சமுதாய கூடம் வாயிலாக காதுகுத்து, திருமணம், சடங்கு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த பகுதிவாசிகள் குறைந்த செலவில் நடத்தி வந்தனர்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டடம் பழுதடைந்த காரணத்தால் நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் வெளியில் பல ஆயிரம் செலவு செய்து மண்டபம் எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

மேலும் சமுதாய கூட கட்டடம் பழுதடைந்து அடிக்கடி கட்டடத்தின் சில பகுதிகள் உடைந்து விழுவதால் அருகில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.

இதனருகே குழந்தைகள் விளையாடுவதாலும் குடிநீர் குழாய் அமைந்துள்ளதாலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

பழுதடைந்த சமுதாய கூட கட்டடத்தால் அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளது என அப்பகுதிவாசிகள் திருவாலங்காடு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் கூறிவரும் நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement