போக்குவரத்துக்கு லாயகற்ற திருவள்ளூர் சாலை : வாகன ஓட்டிகள் 'திக் திக்' பயணம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது தொடுகாடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியே தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் நடந்து வந்த பாதாள சாக்கடை பணிகளால் இந்த நெடுஞ்சாலையில் தொடுகாடு அடுத்த கிளாய் சாலை சந்திப்பு முதல் ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை வரை பல இடங்களில் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
ஸ்ரீபெரும்புதுாரில் நடந்து வந்த பாதாள சாக்கடை பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' மூடி சேதமடைந்து மரணகுழிகளாக மாறியுள்ளது. இப்பகுதியில் காவல்துறை சார்பில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அவசர மருத்துவ தேவைக்கு இவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்வதில் கூட கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோசமான நிலையில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் பாதாள சாக்கடை மேன்ேஹால் பகுதியைச் சீமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.