தகிக்கும் வெயில்: கட்டுமான தொழிலாளர் வேலை நேரத்தை மாற்ற அறிவுறுத்தல் வெயில் அதிகரிப்பால் நிபுணர்கள் அறிவுறுத்தல்
சென்னை:மனித உடலின் சராசரி வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ். சுற்றுப்புற வெப்பநிலை, சராசரியை விட அதிகரிக்கும்போது, உடலில் வியர்வை மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் போன்றவை வழியே, அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி, மனித உடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது.
அதிக வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, விவசாயிகள், கட்டுமானப் பணியாளர்கள் என, திறந்தவெளியில் பணியாற்றுவோருக்கான பணி நேரத்தை மாற்றி அமைக்க, கட்டுமான நிறுவனங்களுக்கு, விவசாயிகளுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என, பொது சுகாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:
கோடைக்காலம் துவங்கி இருப்பதால், வரும் காலங்களில் வெப்ப அலை வீசலாம். எனவே, தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீர் பருக வேண்டும். மோர், அரிசி கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ்., கரைசல் ஆகியவற்றை பருகலாம்.
கட்டுமான நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு, தங்கள் பணி நேரத்தை மாற்றிக்கொள்ள, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக, காலை 8:00 முதல் 11:00 மணி வரை, பிற்பகல் வெயிலின் தன்மைக்கு ஏற்ப, 2:00 மணிக்கு மேல் என்ற அளவில் பணியாளர்களுக்கான பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
நண்பகல் வெயில் நேரத்தில், 3 மணி நேரம், அதிக உடல் உழைப்பில் ஈடுபடும், கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள், மூட்டை துாக்கும் தொழிலாளிகள் உள்ளிட்டோருக்கு, கட்டாயம் ஓய்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.