பெஞ்சல்' புயல் பயிர் சேத நிவாரணம்... ரூ.161 கோடி; 1.61 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.161 கோடியே 73 லட்சம் நிவாரணத் தொகை வழங்கும் பணி துவங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்தாண்டு இறுதியில் உருவான பெஞ்சல் புயலால் கனமழை பெய்து, 3 லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 16 பேர் இறந்தனர்.
மேலும், 42 மாடுகள், 440 ஆடுகள், 151 கன்றுக்குட்டிகள் இறந்தன. பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், 2,500 வீடுகள் பகுதியாகவும், 380 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்தன.
இதேபோல் வெள்ள நீரில் மூழ்கி, 2 லட்சத்து ஆயிரத்து 400 ஏக்கர் விளைநிலங்கள் முழுமையாகவும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 715 ஏக்கர் விளைநிலங்கள் 33 சதவீதத்திற்கு மேலாக சேதமடைந்தன. இதனால் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 486 விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
தோட்டக்கலைத் துறையில் நடத்திய ஆய்வில், 71 ஆயிரத்து 275 ஏக்கர் தோட்டப் பயிர்கள் முழுமையாகவும், 4 ஆயிரம் ஏக்கர் தோட்டப்பயிர்கள் 33 சதவீதத்திற்கு மேலாகவும் பாதிப்புக்குள்ளானது தெரிய வந்தது. இதனால், 13 ஆயிரத்து 857 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து வெள்ளத்தில் பயிர்கள் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு பயிர் சேத நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா மேற்பார்வையில், விவசாயிகளுக்கான நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாலுகா அலுவலகங்கள் மூலமாக நிவாரண உதவித்தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும் பணி கடந்த 2 நாட்களாக துவங்கியது. விழுப்புரம் தாலுகாவில் 20 ஆயிரத்து 418 பேருக்கு ரூ. 19.11 கோடி, விக்கிரவாண்டி தாலுகாவில் 20 ஆயிரத்து 718 பேருக்கு ரூ.15.49 கோடி, வானுார் தாலுகாவில் 7 ஆயிரத்து 74 பேருக்கு ரூ.6.91 கோடி, திண்டிவனம் தாலுகாவில் 16 ஆயிரத்து 312 பேருக்கு ரூ.12.47 கோடி, மரக்காணம் தாலுகாவில் 3 ஆயிரத்து 713 பேருக்கு ரூ.3.52 கோடி, செஞ்சி தாலுகாவில் 24 ஆயிரத்து 13 பேருக்கு ரூ.21 கோடி, மேல்மலையனுார் தாலுகாவில் 16 ஆயிரத்து 224 பேருக்கு ரூ.16.51 கோடி, கண்டாச்சிபுரம் தாலுகாவில் 11 ஆயிரத்து 830 பேருக்கு ரூ.13.33 கோடி, திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் 10 ஆயிரத்து 433 பேருக்கு ரூ.12.75 கோடி நிவாரணத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை துறை மூலம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 745 விவசாயிகளுக்கு, ரூ. 121 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரம், தோட்டக் கலைத்துறை மூலம் 30 ஆயிரத்து 567 விவசாயிகளுக்கு ரூ. 40 கோடியே 60 லட்சத்து 10 ஆயிரத்து 370 ரூபாய் என, மொத்தம் ரூ.161 கோடியே 73 லட்சத்து 35 ஆயிரம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

