மொழி குறித்து வீண் விமர்சனங்கள் வேண்டாம்: கட்சி எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

40


சென்னை: ஹிந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம் என தி.மு.க., எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.


தி.மு.க, லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம், கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், இன்று (மார்ச் 09) காலை 11 மணிக்கு, சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்னை இல்லை. தமிழகத்தின் பிரச்னை. பல மாநிலங்களின் பிரச்னை.



எனவே தி.மு.க., எம்.பி.,க்கள் தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பி.,க்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டில்லியில் மேற்கொள்ள வேண்டும். ஒரே ஒரு அனைத்து கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி., அடங்கிய குழு சென்று விளக்க வேண்டும்.


தொகுதி மறுசீரமைப்பில் தேசிய அளவிலான கவனத்தை இருக்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.



தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் நமக்கான உரிமையை பெற இது ஒரு தொடக்கம் தான். உடனடியாக டில்லியில் தமிழக எம்.பி.,க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துக்களை கேட்டு செயலாற்றிட வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் தி.மு.க., எம்.பி.,க்கள் இருக்கிறார்கள்.



தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை என பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை இந்த போராட்டம், முன்னெடுப்பு தொடர வேண்டும். ஹிந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம். தொகுதி தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும், ஒருங்கிணைத்து களம் காண்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



முன்னதாக, 'தொகுதி மறுசீரமைப்பு குறித்து பார்லியில் குரல் எழுப்புவோம். மாநில உரிமைகளை நிலைநாட்ட அனைத்து எம்.பி.,க்களும் ஒன்றிணைந்து செயல்படுவோம். தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களையும் ஒன்றிணைத்து களம் காண்போம்' உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement