3வது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு: ஆந்திர எம்.பி., அறிவிப்பு

7


அமராவதி: ஆந்திராவில் 3வதாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு அளிக்கப் போவதாக அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., அறிவித்துள்ளார். பெண் குழந்தை பெற்றால் ரூ.50 ஆயிரமும், ஆண் குழந்தை பெற்றால் பசு மாடும் அளிப்பதாக கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறுகையில், மக்கள் தொகை குறித்து கவனம் செலுத்த வேண்டும். தென் மாநிலங்களில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி உள்ளது. வட மாநிலங்களில் மட்டும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் தொகை அதிகமாக இருந்தால் தான், பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும். மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.


சமீபத்தில், குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு விடுமுறை அளிக்கவும் சந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். முன்பு இரண்டு குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது எத்தனை குழந்தை பெற்றுக் கொண்டாலும் அந்தச் சலுகை அளிக்கப்படும் எனக்கூறியிருந்தார்.


இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த விஜயநகரம் தொகுதி எம்.பி., காளிசெட்டி அப்பலநாயுடு , பெண்கள் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு வழங்கப்படும். 3வதாக பெண் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பசு மாடும் பரிசாக வழங்குவேன். நிதியுதவியை எனது சம்பளத்தில் இருந்து வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.


அப்பல நாயுடுவில் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை தெலுங்கு தேசம் கட்சியினர் மறுபதிவு செய்து வருகின்றனர். இந்த அறிவிப்பு புரட்சிகரமானது என பெண்கள் தெரிவிப்பதாக தெலுங்கு தேசம் கட்சியினர் கூறியுள்ளனர். அப்பல நாயுடுவிற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement