பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று துவக்கம்

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று(மார்ச் 10) துவங்கி ஏப்.,4 வரை நடைபெற உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு கடந்த ஜன.,31 முதல் பிப்.,13 வரை நடந்தது.
இந்நிலையில் இரண்டாவது அமர்வு நாளை துவங்குகிறது. இக்கூட்டத்தில், மணிப்பூர் கலவரம், இந்தியாவை டிரம்ப் நிர்வாகம் கையாளும்விதம் உள்ளிட்ட விஷயம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
ஒரே எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விஷயத்தை எழுப்ப திரிணமுல் காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.தேசிய கல்விக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக கட்சிகள் கேள்வி கேட்கக்கூடும்.
அரசின் திட்டம்
அதே நேரத்தில், இந்தக் கூட்டத்தொடரில் வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்ற அரசு திட்டமிட்டு உள்ளது. இம்மசோதா குறித்த அறிக்கையை பார்லிமென்ட் கூட்டுக்குழு அளித்துவிட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அம்மாநில பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து ஒப்புதல் பெற உள்ளார்.
மேலும், பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்க பார்லிமென்டின் ஒப்புதல் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதனால், இன்று துவங்கி ஏப்., 4 வரை நடக்கும் இக்கூட்டத்தொடரில் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
