கிணற்றில் மூழ்கி லாரி டிரைவர் சாவுசடலத்தை மீட்க கோரி சாலைமறியல்


கிணற்றில் மூழ்கி லாரி டிரைவர் சாவுசடலத்தை மீட்க கோரி சாலைமறியல்


மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த வகுத்தானுாரை சேர்ந்தவர் பாஸ்கர், 55. இவரது விவசாய கிணற்றில் இருந்த, நீர்மின்மோட்டார் பழுதடைந்துள்ளது.
அதை நேற்று காலை, 9:00 மணிக்கு கிணற்றிலிருந்து மேலே கொண்டு வர, ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சுதாகர், 40, என்பவர் கிணற்றில் இறங்கினார்.
முதலில் கிணற்று நீருக்குள் சென்றவர், மேலே வந்துள்ளார். பின், 2வது முறை நீருக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை. தகவலின் படி, சம்பவ இடத்திற்கு அரூர் மற்றும் தர்மபுரியில் இருந்து, 2 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் சுதாகரை தேடினர். பல மணி நேரமாகியும் மீட்க முடியவில்லை.
இந்நிலையில் சுதாகரின் உடலை மீட்க வலியுறுத்தி, மதியம், 3:00 மணிக்கு, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அரூர் - தர்மபுரி சாலையில், வேப்பசென்னம்பட்டியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர், மொரப்பூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா பேச்சுவார்த்தை நடத்தியதால், 3:30 மணிக்கு கலைந்து சென்றனர். தொடர்ந்து, 6 மின்மோட்டார்களை வைத்து, கிணற்றிலிருந்து நீரை இறைக்கும் பணி நடந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின், மாலை, 5:15 மணிக்கு சுதாகரின் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement