சந்தேகிப்பது தெரியாமல் குற்றவாளியை கண்டுபிடிப்பது தான் சவால்!

காவல்துறையில் பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகளை விசாரணை செய்யும் அதிகாரிக்கு, ஒவ்வொரு வழக்கும் ஒரு சவால் தான். அதுவும் சிறு தடயம் கூட இல்லாமல், சாட்சிகளின்றி தனியிடத்தில் நிகழும் குற்றங்கள், மிகப்பெரிய சவால் மட்டுமல்ல; மிகப்பெரிய மன உளைச்சலையும் ஏற்படுத்தி விடும். தன் கடுமையான முயற்சிக்கு பிறகு, அத்தகைய ஒரு வழக்கில், உண்மையை கண்டறியும்போது ஏற்படும் மனநிறைவிற்கும், மகிழ்ச்சிக்கும் ஈடாக எந்த வெகுமதியையும், விருதையும் குறிப்பிட முடியாது.


கடந்த, 2004ல் நான் சென்னை அண்ணா நகர் காவல் உதவி ஆணையராக இருந்த போது, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பணம், நகைக்காக கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. பெரும்பாலான வழக்குகளில் எந்த தடயமும் கிடைக்காமல், அனைத்தும் விசாரணை அளவிலேயே இருந்தன. ஒரு குற்ற சம்பவம், எப்படி நடந்தது என்று பார்ப்போம்...



அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தனியாக இருந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. விசாரணை அதிகாரி, குற்றப்பிரிவு ஆய்வாளர் சுந்தரம்.

கத்திக்குத்து



இருந்தாலும், குற்றம் நிகழ்ந்த சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, நான், அந்த கொலை வழக்கு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை துவக்கினேன். கணவன், மனைவி, பள்ளிக்கு செல்லும் ஒரு ஆண் குழந்தை மட்டும் குடியிருந்த அந்த வீட்டில், மதியம், 12:00 மணி அளவில் கொலை நிகழ்ந்தது.


பிரேதத்தை கவனமாக பார்வையிட்டதில், வயிற்று பகுதியில் கத்திக்குத்து காயங்கள், தலையின் பின்பகுதியில் அடிபட்ட காயம், கழுத்துப்பகுதி நெரிக்கப்பட்டதற்கானஅறிகுறி ஆகியவை காணப்பட்டன. பிரேதத்தை சுற்றி, மிளகாய்ப் பொடி துாவப்பட்டிருந்தது.


அந்த நேரத்தில் வெளியான திரைப்படத்தைப் பார்த்து, கொலையாளி அதைச் செய்திருப்பது புரிந்தது.


சுவற்றில் ஒரு முழுமை இல்லாத, ரத்த விரல்ரேகை பதிவு காணப்பட்டது. அங்கிருந்த டீ மேஜையில், யாரோ தேநீர் அருந்தி வைத்துச் சென்றதற்கான அடையாளமாக, ஒரு கப் காணப்பட்டது. கணவரிடம் புகார் பெற்று, வழக்கு பதிவு செய்யப்பட்டது.


அங்கிருந்த செக்யூரிட்டி உட்பட, குடியிருப்பில் உள்ள ஒருவர் விடாமல் விசாரித்தும், யாரிடமிருந்தும் சம்பவ இடத்துக்கு வந்து போன வெளிநபர் பற்றி, எந்த தகவலும் தடயமும் கிடைக்கவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் பிரபலமடையாத காலம் அது.


முதற்கட்ட விசாரணை முடித்த போது எனக்கு கிடைத்த தகவல், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு மலையாளம் தவிர வேறு மொழி தெரியாது என்பதே. அங்கிருப்பவர்கள் யாரிடமும் அவர், அதிகமாக பேசவோ, பழகவோ மாட்டார்; யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார் என்றும் தெரிந்தது. ஆனால், சம்பவ இடத்தில் யாரோ ஒரு நபர் வந்து தேநீர் குடித்திருக்கிறார்!


அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவரையும் பயம் தொற்றியது. போலீஸ் தங்களை சந்தேகப்படுமோ என்ற அச்சத்தில், முன்னுக்குப் பின் முரணாக, மாற்றி மாற்றி உளறினர். செக்யூரிட்டிகளும் குழப்பி விட்டனர்.


ஒரு செக்யூரிட்டியை கிட்டத்தட்ட சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்தோம். அவரோ, வேலை நேரத்தில் தான் ஒயின்ஷாப்புக்கு சென்று வந்த விஷயம் எங்களுக்கு தெரியக்கூடாது என்பதால், மும்முரமாக உளறிக் கொண்டிருந்தார்.

நெருக்கடி



சந்தேகப்பட்ட அனைவரின் விரல் ரேகைகளையும் எடுத்து, பதிவுக்கூடத்துக்கு அனுப்பி வைத்தோம்.


விசாரணை முடித்து புறப்பட்ட போது, பெண்ணின் கணவரிடம், 'இறுதிச் சடங்குகள் முடிந்ததும், அமைதியாக உட்கார்ந்து யோசியுங்கள்.


'யார் மீதாவது சந்தேகம் எழுந்தால் சற்றும் தாமதிக்காமல், இரவு எந்நேரமாக இருந்தாலும், எனக்கு மொபைல் போனில் தெரிவியுங்கள்' என்று சொல்லி வந்தேன். அவர் துாங்கினாரோ, இல்லையோ... எங்களுக்கு துாக்கம் போச்சு!


சொன்னது போலவே, மூன்றாவது நாள் நள்ளிரவில் போன் செய்தார். 'என் வீட்டுக்கு அண்ணாதுரை என்ற பெயரில், தற்காலிக டிரைவர் அவ்வப்போது வருவான். அவன் மலையாளம் நன்றாக பேசுவான். அதனால், அவனை என் மனைவி வீட்டினுள் அனுமதித்திருக்க வாய்ப்பிருக்கிறது' என்றார்.

மேலும், 'அவன் என் மனைவியிடம் கடனாகப் பணம் கேட்டுதொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்' என்று சொன்னார்.


உடனே அண்ணாநகரில் இரவு அலுவலில் இருந்த ஒரு உதவி ஆய்வாளரை தொலைபேசியில் அழைத்து, பெண்ணின் கணவர் கொடுத்த முகவரியில் டிரைவர் பற்றி விசாரித்து, விபரம் ஏதும் சொல்லாமல் அழைத்து வரச் சொன்னேன்.


அந்த டிரைவர், ஒரு திருமண விழாவுக்காக மயிலாடுதுறை சென்றிருப்பதாகவும், இரண்டு நாளில் திரும்பி வந்தவுடன் வரச் சொல்வதாகவும், அவன் மாமனார் தெரிவித்ததாக அந்த உதவி ஆய்வாளர் கூறினார்.


இதற்கிடையில், ஊடகங்கள் கொடுத்த நெருக்கடி காரணமாகவும், சென்னை மாநகரில் நிலவிய பரபரப்பு காரணமாகவும், அப்போதிருந்த சென்னை மாநகர காவல் ஆணையர் நடராஜன் ஆலோசனை மற்றும்உத்தரவுப்படி, நானும், இணை ஆணையர் சைலேந்திரபாபுவும், இதுபோன்ற கொலை குற்றங்கள் அதிகம் நிகழும் கேரளாவில், தகவல் சேகரிக்கச் சென்றோம்.


ஒரு நாள் முழுதும் பல இடங்களில் இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்த சம்பவ இடங்களை பார்வையிட்டு, சில குற்றவாளிகள் பற்றிய தகவல்களுடன், மறுநாள் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம்...

மதியம், 12:00 மணி. அப்போதைய அண்ணாநகர் துணை ஆணையரும், தற்போதைய மாநகர காவல் ஆணையருமான அருண், மொபைல் போனில் என்னை தொடர்பு கொண்டு, கொலை குற்றவாளி பிடிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

எனக்கு வியப்பு! 'யார் அவன்?' என்று கேட்டேன்; 'நீங்கள் சந்தேகித்து அழைத்து வரச் சொன்ன நபர் தான்' என்றார் அருண்.


'சும்மா வரச் சொல்லுங்க' என, டிரைவர் அண்ணாதுரை குறித்து, அவர் மாமனாரிடம் சொன்னதால், ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக வந்திருந்த பரிச்சயத்தில், மயிலாடுதுறையிலிருந்து திரும்பியதும், 'திருட்டு வழக்கு தானே... பேசி சமாளிச்சிடலாம்' என்ற தைரியத்தில், 'தெனாவெட்டாக' போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நின்றிருக்கிறான்.


அவனை பார்த்ததும், துணை ஆணையர் அருண், அவனது விரல் ரேகையை எடுத்து, கூடத்துக்கு அனுப்பி, உடனடியாக அறிக்கை பெறும்படி ஆய்வாளரிடம் கூறியிருக்கிறார்.

அவ்வாறு அனுப்பப்பட்ட விரல் ரேகை, சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விரல் ரேகையுடன் ஒத்துப் போயிருக்கிறது.

விசாரணையை துவக்கி இருக்கிறார் அருண்... ஆரம்பத்தில் தனக்கு ஏதும் தெரியாது என்று சாதித்த அண்ணாதுரை, விரல் ரேகை முடிவு தெரிந்ததும் வேறுவழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டான்; ஆனால், நகைகளை தான் எடுக்கவில்லை என்று சாதித்திருக்கிறான்.



கேரளாவில் இருந்து வந்ததும், துணை ஆணையர் அறிவுறுத்தல்படி, நான் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, அவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றேன்.


அவனது மாமியார் பட்ட கடனை அடைக்க, மனைவி கொடுத்த நெருக்கடி காரணமாக, தான் வேலை பார்த்த முதலாளி மனைவியிடம் கடனாக, 20,000 ரூபாய் பணம் கேட்டு, அடிக்கடி தொல்லை கொடுத்திருக்கிறான் அண்ணாதுரை.

சுவரில் மோதினான்



சம்பவத்தன்று, முதலாளி மனைவி கொடுத்த டீயை குடித்துவிட்டு, அவரிடம் பணம் கேட்டிருக்கிறான்.


வழக்கம் போல, 'பிறகு பார்க்கலாம்; என் கணவரை கேட்டுத்தான் கொடுக்க முடியும்' என்று கூறவும், ஆத்திரமடைந்த டிரைவர் அண்ணாதுரை, அந்தப் பெண்ணின் கழுத்தை பிடித்துத்தள்ளி தலையை சுவரில் மோதியிருக்கிறான்.


மயக்கமடைந்து விழுந்த பெண்ணை அங்கு காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியால், வயிற்றில் பல முறை குத்தியதுடன், உயிர் பிழைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன், காலால் கழுத்தில் மிதித்து, உயிர் போனதை உறுதி செய்திருக்கிறான்.

20 ஆண்டு சிறை



பிறகு, தான் திரைப்படத்தில் பார்த்த உத்தி நினைவுக்கு வரவே, மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப, மிளகாய் பொடியை துாவி விட்டு, பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்றிருக்கிறான். அவன் கொடுத்த தகவலின்படி, மயிலாடுதுறையில் உறவினர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் கைப்பற்றப்பட்டன.


இந்த வழக்கில், இரண்டே வாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விரைவு நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிழ்ந்த, 142வது நாளில், குற்றவாளி அண்ணாதுரைக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.


நீதிபதி தன் தீர்ப்பில், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியை மட்டுமின்றி, தமிழக காவல்துறையின் திறமையையும் பாராட்டியிருந்தார்.


இப்போதெல்லாம், ஒரு ரவுடி மீது, 48 வழக்குகள் இருப்பதாகவும், அதில் பாதிக்குமேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதாகவும், அந்த ரவுடி தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஊடகங்கள் வாயிலாகக் கேள்விப்படும் போது, முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற முறையில் மனவருத்தம் ஏற்படுகிறது.


எம்.கருணாநிதி- காவல் துறை கண்கணிப்பாளர்-, ஓய்வு

Advertisement