ஜம்மு - காஷ்மீரில் மூவர் கொலை; மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

ஜம்மு,: ''ஜம்மு - காஷ்மீரில் பொது மக்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்புள்ளது,'' என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டினார்.


யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.


இங்கு, கதுவா மாவட்டத்தின் மல்ஹார் பகுதியில் உள்ள இஷு நுல்லா என்ற இடத்தில் வருண் சிங், 15, அவரது மாமா யோகேஷ் சிங், 32, தர்ஷன் சிங், 40, ஆகியோரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.


இந்த மூன்று பேரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது:


கதுவாவில் பயங்கரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இப்பகுதியின் அமைதியான சூழ்நிலையை கெடுக்க சதி வேலை நடக்கிறது. சட்டம் - ஒழுங்கை கண்காணிக்க மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் கதுவாவுக்கு சென்றுள்ளார்.


இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


இதற்கிடையே, கதுவாவுக்கு வந்த மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், அங்குள்ள நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisement