எண்ணெய் வித்து பயிர்களை அறுவடை செய்ய100 நாள் பணியாளர்களை பயன்படுத்த கோரிக்கை


எண்ணெய் வித்து பயிர்களை அறுவடை செய்ய100 நாள் பணியாளர்களை பயன்படுத்த கோரிக்கை


கரூர்கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் நெல், வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றை அறுவடை செய்ய, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து, கூலி ஆட்கள் வருகின்றனர். ஆனால், மானாவாரி நிலங்களில் மழையை நம்பி நிலக்கடலை, எள், ஆமணக்கு உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றை சாகுபடி செய்ய, உள்ளூர் கூலித்தொழிலாளிகளை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கிராம பஞ்சாயத்துகளில், 100 நாள் வேலை உறுதி திட்ட பணிக்கு, கூலி ஆட்கள் சென்று விடுகின்றனர். இதனால், எண்ணெய் வித்துக்கள் அறுவடை பணிக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், தான்தோன்றிமலை, கடவூர், தோகைமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டாரங்களில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை உள்ளிட்ட, எண்ணெய் வித்து பயிர்களை அறுவடை செய்ய கூலி ஆட்கள் வருவது இல்லை.
இதனால், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில், எண்ணெய் வித்து பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக, வெள்ளியணை, உப்பிடமங்கலம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நெற்பயிர்கள் கூட, அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement