நான் தனியாகத்தான் நிற்பேன்: சீமான் மீண்டும் திட்டவட்டம்!

23


கோவை: தி.மு.க.,வுக்கு எதிராக, ஓட்டுக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என இ.பி.எஸ்.., கூறியுள்ளார் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இதை நான் வரவேற்கிறேன். அவர் வரவேற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன்' என சீமான் பதில் அளித்தார்.


கோவை விமான நிலையத்தில், நிருபர்களுக்கு சீமான் அளித்த பேட்டி:
புதிய கல்விக்கொள்கை இல்லம் தேடி கல்வியில் தான் வருகிறது. நாம் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோமா, ஏற்கிறோமா என்று தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இல்லம் தேடி கல்வி கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டு உள்ளோம். கல்வி ஆய்வாளர்கள் எல்லாம், புதிய கல்வி கொள்கை நமது குழந்தைகளுக்கு எழுதி வைக்கிற மரண சாசனம் என்று சொல்கிறார்கள்.

பெரிய தடை



கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும். சுமையாக இருக்க கூடாது. எந்ந நாட்டிலும் இல்லாத வகையில் இந்த நாட்டில் மட்டும் தான் விரும்பிய கல்வியை படிப்பதில் அவ்வளவு தடையாக இருக்கிறது. மருத்துவத்தில் பி.ஜி., படிக்க மறுபடியும் நீட் எழுத வேண்டி இருக்கிறது. மதிப்பெண்களை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.
நாட்டை நிர்வகிக்கும் தலைவர்கள் என்ன தேர்வு எழுதுகிறார்கள்.

பணம் இருந்தால்..!



எந்த தகுதியும் இல்லாதவர் இந்த நாட்டை ஆளும் தகுதி பெற முடியும். எல்லாவற்றிக்கும் தேர்வு வைக்கிறார்கள். கல்வியில் சிறந்த நாடாக இருக்கும் தென்கொரியா 8 வயதில் தான் பிள்ளைகளை முதல் வகுப்பில் சேர்க்கிறது. நீங்க 8 வயதில் பொதுச்தேர்வு எழுத சொல்கிறார்கள். கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்டு சமகல்வி என்று பேசுவதை நாங்கள் எப்படி எடுத்து கொள்வது. பணம் இருந்தால் நல்ல கல்வியை கற்கலாம்.

100 நாள் வேலை



முதல் தர ஆசிரியர்களை எங்க பணி நியமனம் செய்கிறீர்கள்? சம கல்வி என்பது இருக்கிறதா? எனது அம்மா, தங்கை, அக்கா 100 நாள் வேலைக்கு போகிறார்கள். அவள் உப்புக்கு, அரிசிக்கு, பாலுக்கு, எண்ணெய்க்கு என்ன சேவை வரி கட்டுகிறாளோ? அதே தான், இந்த நாட்டில் அம்பானி, அதானி மனைவி கட்டுகிறார்கள்.

வரி vs வாழ்க்கை தரம்



வரி என்பது இந்த நாட்டில் ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கை தரம் ஒன்றாக இருக்கிறதா? சம கல்வி, சம உரிமை என்பது வெற்று வார்த்தை. சிற்றூரில் 3ம் தர ஆசிரியர்கள் தான் பணி அமர்த்துகின்றனர். ரஷ்யா, அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவனுக்கு இந்திய கனவு இருக்கிறதா? இந்த நாட்டு மாணவனிடம் அயல்நாட்டு கனவு தான் இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.

கேள்வியும், பதிலும்!



எஸ்.பி., வேலுமணியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது எல்லோரும் பங்கேற்பார்கள். எங்கள் குடும்ப நிகழ்வு. இதில் அரசியல் பேசாதீர்கள்' என சீமான் பதில் அளித்தார்.



தி.மு.க.,வுக்கு எதிராக, ஓட்டுக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என இ.பி.எஸ்.., கூறியுள்ளார் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இதை நான் வரவேற்கிறேன். அவர் வரவேற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
என்னுடைய பங்கு இதில் முதன்மையானதாக இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள். நான் மட்டும் தனியாக நிற்பேன். நான் மட்டும் தான் உருப்படியாக நிற்கிறேன்' என சீமான் பதில் அளித்தார்.

இது நிலைப்பாடு!



தொகுதி மறுசீரமைப்பு குறித்து சீமான் கூறியதாவது: 30 கோடி இருக்கும் போது 543 எம்.பிக்கள் இருந்தார்கள். இப்போது 150 கோடியை தொட்ட பிறகு மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லை. ஆறு சட்டமன்றத்தில் ஒரு நாடாளுமன்றம் என்று இருப்பதை மாற்றி, 3 சட்டமன்றங்களுக்கு ஒரு நாடாளுமன்றம் என்று மாற்ற வேண்டும். அப்போது உரிய பிரதிநிதித்துவம் இருக்கும், என்றார்.

Advertisement