திருச்செந்தூர் மாசித்திருவிழா;பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்

திருச்செந்தூர்; திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்கள் வெள்ளத்தில் அருள்பாலித்தார்.



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா கடந்த மார்ச்; 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (மார்ச் 10) எட்டாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.00 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது.


அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெண் பட்டு, வெண் மலர்கள் அணிந்து, வெள்ளைச் சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சத்தில் எழுந்தருளி, எட்டுவீதிகளிலும் உலா வந்து மேலக்கோயிலை சென்றடைந்தார்.


தொடர்ந்து காலையில் மேலக்கோயிலில் (சிவன் கோயிலில்) வைத்து சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. நண்பகல் 12 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு, மரிக்கொழுந்து, பச்சை மற்றும் துளசி மாலை அணிந்து, பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து திருக்கோயில் வந்து சேர்க்கையானார்.


நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சைநிற ஆடைகள் அணிந்து, சுவாமிக்கும் பச்சை பட்டு, பச்சை மாலைகள் சாத்தி அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


நாளை(மார்ச் 11) ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 12ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மீன லக்கனத்தில் துவங்குகிறது.


தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தேர்களில் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து அருள்பாலிக்கிறார்கள். 13ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement