பஞ்சாபில் சர்வதேச போதை கடத்தல் மன்னன் கைது!

2


புதுடில்லி: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் செஹனாஷ் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.


அமெரிக்காவின் எப்.பி.ஐ., போலீசாரால் தேடப்படும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் செஹனாஷ் சிங், கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு கொகைன் என்ற போதைப் பொருள் கடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளான்.


கடந்த மாதம் 26ம் தேதி, அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த செஹனாஷின் கூட்டாளிகளான, அம்ரித் பால் சிங், தக்திர் சிங், சர்ப்சித் சிங், பெர்னான்டோ வல்லதரேஸ் ஆகிய 4 பேரை அமெரிக்கா போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 391 கிலோ மெத்தம்பெட்டமைனும், 109 கிலோ கொகைன் மற்றும் 4 ஆயுதங்களை அவர்களின் வீடுகளில் பறிமுதல் செய்தனர். இந்த சூழலில் கடத்தல் மன்னன் செஹனாஷ் சிங் இந்தியாவுக்கு தப்பியோடி வந்து, தலைமறைவாகினான்.

அவன் இருப்பிடம் பற்றி தகவல் கிடைத்த பஞ்சாப் மாநில போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடந்து, அவனிடம் விசாரித்து வருகின்றனர். அவன் மீது பல்வேறு நாடுகளில் வழக்குகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement