திருத்தணி காய்கறி சந்தை பெயர் மாற்றம்; இது பா.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி: அன்பு மணி

4

திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர், பா.ம.க., எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி என்று கட்சியின் தலைவர் அன்புமணி கூறினார்.

அன்புமணி அறிக்கை:

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3.02 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்த வந்த பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது. இந்த முடிவை கடுமையாக எதிர்த்த நான், தமிழ்நாட்டுக்கு அடையாளம் தேடித் தந்த பெருந்தலைவரின் பெயரை நீக்கக்கூடாது என்றும், அவ்வாறு நீக்கினால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணமாக இருந்த காமராஜர் போன்ற தலைவர்களின் பெயர்கள் எங்கு சூட்டப்பட்டிருந்தாலும், அதன் பெயரை நீக்கும் அல்லது மாற்றியமைக்கும் அரசியலை தமிழக அரசு செய்யக்கூடாது. அரசின் திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்கள் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement