தோல்வி சோகத்தில் நியூசிலாந்து * கேப்டன் சான்ட்னர் ஏமாற்றம்

துபாய்: ''சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ரோகித் சர்மாவின் பேட்டிங், எங்களுக்கு கசப்பான முடிவைத் தந்துவிட்டது,'' என சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சி., தொடரில் ஐந்தாவது முறையாக பைனலில் தோற்றது நியூசிலாந்து. கடந்த 2009 ல் சாம்பியன்ஸ் டிராபி (ஆஸி.,), 2015 (ஆஸி.,), 2019ல் (இங்கிலாந்து) ஒருநாள் உலக கோப்பை தொடர், 2021ல் 'டி-20' (ஆஸி.,) உலக கோப்பையை தொடர்ந்து மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் தோல்வியடைந்தது.
இதுகுறித்து நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர் கூறியது:
சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பெருமையாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றால் எப்போதும் சவாலானது தான். தவிர அரையிறுதியில் விளையாடிய லாகூர் ஆடுகளத்தை விட, துபாய் மைதானம் வித்தியாசமானது. இதற்குத் தயாராகவே இருந்தோம்.
பைனலில் அவ்வளவு எளிதாக விட்டுத்தரவில்லை. இந்திய அணிக்கு எதிராக போட்டி முழுவதும் போராடினோம். அதேநேரம் ஒரு சில தருணங்களால் போட்டி எங்களிடம் இருந்து நழுவியது.
தவிர, ரோகித் சர்மாவின் பேட்டிங்கும், போட்டியை எங்களிடம் இருந்து பறித்து விட்டது. இந்திய அணியினர் துபாய் சூழல் குறித்து சிறப்பாக தெரிந்து வைத்திருந்தனர். பல போட்டிகளில் இங்கு வெற்றி பெற்றிருந்தனர். கடைசியில் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு கசப்பான முடிவாக அமைந்தது.
எங்களது முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி, தோள்பட்டை காயத்தால் பைனலில் துரதிருஷ்டவசமாக விளையாட முடியாமல் போனது, கலக்கத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், இத்தொடரில் எங்களுக்கு மறக்க முடியாத சில தருணங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement