ரோகித் சர்மா எதிர்காலம்... * 2027 உலக கோப்பை தொடருக்கு தயாரா

துபாய்: ''ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை,'' என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
துபாயில் சாம்பியன்ஸ் டிராபி பைனல் நடந்தது. இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இம்மகிழ்ச்சியுடன் ரோகித் சர்மா 37, ஒருநாள் அரங்கில் இருந்தும் விடை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதுகுறித்து ரோகித் கூறுகையில்,'' எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. ஒருநாாள் போட்டியில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை. வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். வரும் உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து இப்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது,'' என்றார்.
வரும் 2027ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்க, ரோகித் திட்டமிட்டு உள்ளார் என தெரிகிறது. 'டி-20' உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி வென்றது போல, ஒருநாள் உலக கோப்பையுடன் விடைபெற முடிவு செய்திருக்கலாம்.
ரோகித்தை பொறுத்தவரையில் தொடர்ந்து போட்டிகளில் ரன் எடுக்கும் வரை, அவருக்கு வயது ஒரு தடையாக இருக்காது. 2027 உலக கோப்பை தொடரின் போது, ரோகித்துக்கு 39 வயதாகி விடும்.
27 போட்டிகள்
ஒருவேளை, 2027 வரை தொடர விரும்பினால், வரும் இரண்டு ஆண்டில் அதிகபட்சம் 27 ஒருநாள் போட்டிகளில் தான் பங்கேற்க முடியும். உடற்தகுதியை சரியாக பராமரிக்கப்பட வேண்டும்.
இது முடியுமா
பொதுவாக ஓய்வு என்பது சம்பந்தப்பட்ட வீரர்களின் தனிப்பட்ட முடிவு என்றாலும், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), தேர்வாளர்கள் இணைந்து ரோகித், கோலி என இருவரையும் அணியில் தொடரை வைக்க வேண்டும்.
50 ஓவர் போட்டிகளில் 52.82 ரன் சராசரி வைத்துள்ள இளம் வீரர் ஜெய்ஸ்வால், காத்திருக்கிறார். 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் 5 சதம் அடித்துள்ள இவரை, 2027 உலக கோப்பை தொடருக்கு தயார் படுத்த முடிவு செய்யலாம்.
பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழுத் தலைவர் அகார்கர் தான் முடிவு எடுக்க வேண்டும். அனுபவ வீரர் வேண்டும் என முடிவு செய்து விட்டால், ஜெய்ஸ்வால் நிலை கேள்விக்குறியாகி விடும்.
டெஸ்டில் எப்போது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' தொடருக்குப் பின் டெஸ்ட் அரங்கில் இருந்து ரோகித், ஓய்வு பெற்றாரா என இன்னும் தெரியவில்லை. அடுத்து ஜூன் மாதம் இந்திய அணி, இங்கிலாந்து தொடருக்கு செல்லும் போது இதுகுறித்து தெரியவரலாம்.
தவிர டெஸ்டில் பும்ரா கேப்டனாக நம்பிக்கை தந்தாலும், அவ்வப்போது காயமடைந்து விடுகிறார். துணைக் கேப்டன் சுப்மன் கில், கேப்டன் பணிக்கு தயாராகும் வரை, டெஸ்ட் அணியில் ரோகித் தொடரலாம்.
வருண் உற்சாகம்
சாம்பியன்ஸ் டிராபி 9 விக்கெட் சாய்த்த 'சுழல் மாயாவி' வருண் சக்வரத்தி, கோப்பை வெல்ல கைகொடுத்தார். ஜடேஜா பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்ததும், 'டிரசிங் ரூமில்' இருந்த வருண், கையில் வைத்திருந்த பந்தை, தரையில் ஓங்கி அடித்து வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடினார்.
வெற்றி ஊர்வலம்
கடந்த 2024ல் 'டி-20' உலக கோப்பை வென்ற போது, இந்திய வீரர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து, பிரபோர்ன் மைதானம் வரை திறந்தவெளி பஸ்சில் வெற்றி ஊர்வலம் சென்றனர். இம்முறை பிரபோர்ன் மைதானத்தில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தவிர மார்ச் 22ல் ஐ.பி.எல்., தொடர் துவங்க உள்ளது. இதனால் துபாயில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனித்தனியாக தாயகம் திரும்புகின்றனர். வெற்றி பவனி இருக்காது எனத் தெரிகிறது. இதற்கேற்ப, இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் நேற்று டில்லி திரும்பினார்.
'ஹிட் மேன்' - 'ஐஸ் மேன்'
துவக்கத்தில் 'ஹிட் மேன்' ரோகித் விளாச, மறுபக்கம் சற்று நேரம் எடுத்துக் கொண்டு பின் நிதானமாக ரன் குவிக்கிறார் 'ஐஸ் மேன்' சுப்மன். நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் இவர்களது ரன் குவிப்பு, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
கேப்டன் ரோகித் கூறுகையில்,'' சுப்மனிடம் நிறைய திறமை உள்ளது. போட்டியை எப்படி முன்னெடுத்துச் செல்வது, இதற்காக எப்படி கூட்டணி அமைப்பது என நாங்கள் பேசிக் கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறோம். நான் வாண வேடிக்கை காட்ட விரும்புகிறேன். அவர் களத்தில் நிலைத்து விளையாட விரும்புகிறார். இரு வழியும் வெற்றிக்கு கைகொடுக்கிறது. சிறப்பான 'பார்ட்னர்ஷிப்' அமைக்க முடிகிறது,'' என்றார்.
பாண்ட்யா நம்பிக்கை
இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 24.3 ஓவர் பந்து வீசி, 4 விக்கெட் சாய்த்தார். அவர் கூறுகையில்,'' இந்த ஆண்டு முழுவதும் கற்றல்களும் சவால்களும் நிறைந்ததாக இருந்தன. இந்த சவால்களில் இருந்து விலகிச் செல்ல எனது மனநிலை கற்றுக் கொடுக்கவில்லை. ஏனெனில் சவால்கள் கடினமாக இருந்தால் வலிமையாக போராட வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். கடின முயற்சிக்கு என்றும் பலன் உண்டு. 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் தோற்றோம். அந்த கனவு இன்று நனவானது. இந்தியாவுக்காக கோப்பை வென்றது மிக முக்கியமானது,'' என்றார்.
கற்றுக் கொண்டோம்
கோலி கூறுகையில்,'' கடந்த தொடர்களில் முக்கிய நேரங்களில் ஆதிக்க செலுத்தாமல், போட்டியை வெற்றிகரமான 'பினிஷிங்' செய்ய முடியாமல் தவித்தோம். இந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அடைந்த ஏமாற்றத்துக்குப் பின், தற்போது பெரிய தொடரில் சாதித்துள்ளோம்,'' என்றார்.
சூப்பர் ராகுல்
இந்திய அணி வீரர் ராகுல் 32. வழக்கமாக 5வது இடத்தில் களமிறங்கும் இவர், சமீபத்திய போட்டிகளில் 6வது இடத்தில் வருகிறார். போட்டியை சிறப்பான முறையில் பினிஷிங் செய்து, புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,'' வெவ்வேறு இடங்களில் பேட்டிங் செய்வதற்கு அதிக பயிற்சி தேவைப்படும். ஒவ்வொரு போட்டி சூழல் எப்படி உள்ளது, இதற்கேற்ப எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். இதற்கேற்ப அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.
'சைலன்ட் ஹீரோ'
நான்காவது இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அசத்தினார். இத்தொடரில் அதிக ரன் (243) எடுத்த இந்திய வீரரானார். கேப்டன் ரோகித் கூறுகையில்,'' போட்டியின் 'மிடில்' சூழலில், சிறப்பாக செயல்பட்டார் ஸ்ரேயாஸ். சக வீரர்களுடன் இணைந்து 'பார்ட்னர்ஷிப்' அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்று 'சைலண்ட் ஹீரோ' ஸ்ரேயாஸ்,'' என்றார்.