அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.33 லட்சம் பறிமுதல் பெரிய விஷயம் அல்ல; பூபேஷ் பாகல்

ராய்ப்பூர்: எனது வீட்டில் ரெய்டு மூலம் ரூ. 33 லட்சம் கைப்பற்றப்பட்டது பெரிய விஷயம் அல்ல என்று சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் கூறி உள்ளார்.
சத்தீஸ்கரில் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது முதல்வராக பூபேஷ் பாகல் இருந்தார்.
அவரது ஆட்சியில், மதுபான கொள்கை ஊழல் காரணமாக ரூ.2100 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாஜி முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகல் வீட்டில் இன்று (மார்ச் 10) காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், ரூ.33 லட்சம் கைப்பற்றப்பட்டது.
மேலும், சோதனைனை முடித்துக் கொண்டு அதிகாரிகள் காரில் புறப்பட்டுச் சென்றனர். வழியில் இந்த காரை மடக்கிய சிலர், அதன் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் சோதனை குறித்து பூபேஷ் பாகல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது வீட்டில் ரூ.33 லட்சம் கைப்பற்றப்பட்டது பெரிய விஷயம் அல்ல என்று கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது;
அமலாக்கத்துறை சோதனை நடத்த வந்தபோது நான் செய்தித்தாள் படித்தபடியே ஒரு கோப்பையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்தேன். அவர்களை வரவேற்று, உங்களுக்காக (அமலாக்கத்துறை) தான் பல மாதங்களாக காத்திருந்தேன் என்றும் சொன்னேன்.
என் வீட்டில் மனைவி, மூன்று மகள்கள், மகன், மருமகள்கள், பேரன்கள் மற்றும் பேத்திகளும் இங்கு வசிக்கிறார்கள். நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் குடும்பத்தில் நாங்கள் 140 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறோம்.
சோதனையில் ரூ.32-33 லட்சம் கண்டுபிடித்துள்ளனர். அது ஒரு பெரிய விஷயம் அல்ல. காரணம் நாங்கள் பெரிய குடும்பம். 140 ஏக்கர் விவசாயம், மற்ற வழிகளில் எங்களுக்கு வருமானம் வருகிறது. அதற்கான ஆவணங்களை நாங்கள் அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
