பாகிஸ்தான் பங்கேற்காதது ஏன்: அக்தர் கேள்வி

கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன் என, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.

துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பை வென்றது. இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா, பி.சி.சி.ஐ., தலைவர் ரோஜர் பின்னி, நியூசிலாந்து கிரிக்கெட் சி.இ.ஓ., ரோஜர் டிவோஸ் பங்கேற்று, வீரர்களுக்கு பதக்கம், கோப்பை வழங்கினர்.

ஆனால், தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) சார்பில் எந்த ஒரு நிர்வாகியும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஒருவேளை அழைக்கப்படவில்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


பி.சி.பி., தலைவர் மொசின் நக்விக்கு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரருக்கான பணிகள் இருந்ததால் துபாய் செல்லவில்லை. பி.சி.பி., சார்பில் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.,) சுமைர் அகமது, துபாய் சென்றிருந்தார். இருப்பினும் இவர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஒருவேளை இவரை அழைக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவத்தை ஐ.சி.சி.,யின் கவனத்திற்கு கொண்டு செல்ல பி.சி.பி., திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் வெளியிட்ட செய்தியில், ''இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி வென்றதில் மகிழ்ச்சி. இத்தொடரை பாகிஸ்தான் நடத்தியது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பி.சி.பி., நிர்வாகிகள் இடம் பெறாதது ஏன் என்று தெரியவில்லை. பி.சி.பி., நிர்வாகிகள் பரிசளிப்பில் பங்கேற்றிருக்க வேண்டும். இது, வருத்தமளிக்கிறது.,'' என்றார்.
தொடரும் சர்ச்சை
பாகிஸ்தானில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் துவக்கத்தில் இருந்தே சர்ச்சை இருந்தது. முதலில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று போட்டியில் பங்கேற்க இந்திய அணி மறுத்தது. பின், இந்திய அணிக்கான போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த முடிவானது.
* பின், பாகிஸ்தான் மைதானத்தில் இந்திய மூவர்ணக்கொடி இடம் பெறவில்லை என்று சர்ச்சை உண்டானது.
* இந்திய வீரர்களின் 'ஜெர்சி'யில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டது.
* இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்த 'டிவி' சேனலில் சாம்பியன்ஸ் டிராபிக்கான 'லோகோ' மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
* லாகூரில் நடந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியின் போது இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
* கடைசியாக, பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement