சாலையில் கிடந்த தங்க நெக்லஸ்; போலீசில் ஒப்படைத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு

4

கமுதி: சாலையில் கிடந்த நான்கரை பவுன் தங்க நெக்லஸை போலீசிடம் ஒப்படைத்த தொழிலாளர்களை அனைவரும் பாராட்டினர்.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த செந்தில்குமார், 46, பெரிய உடப்பங்குளம் அய்யனார், 32, இருவரும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் தொழில் செய்து வருகின்றனர்.
நேற்று முதுகுளத்தூர் காந்தி சிலை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்துவதற்காக வந்துள்ளனர். பிறகு பணி முடிந்தவுடன் டூவீலரில் கமுதி நோக்கி சென்றுள்ளனர். அப்போது முதுகுளத்தூர் -கமுதி ரோடு தூரி பஸ் ஸ்டாப் அருகே பிளாஸ்டிக் பைகள் கிடந்தன.

கீழே கிடந்த பிளாஸ்டிக் பைகளை எடுத்து பார்க்கும்போது தங்க நகை இருந்தது தெரியவந்தது. தாங்கள் எடுத்த அந்த நெக்லஸை போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதன்படி நான்கரை பவுன் எடையுடைய அந்த தங்க நெக்லஸை முதுகுளத்தூர் புறக்காவல் நிலையத்தில் டி.எஸ்.பி., சண்முகம் இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி முன்னிலையில் ஒப்படைத்தனர்.


ஒப்படைத்த செந்தில் குமார், அய்யனாரின் நேர்மையை போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
சாலையில் கிடந்த தங்க நெக்லஸின் உரிமையாளர் யார் என கண்டறிந்து ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement