15 வயது மாணவியுடன் டிரைவர் தற்கொலை? 25 நாட்களுக்கு பின் 'ட்ரோன்' உதவியுடன் உடல்கள் மீட்பு

காசர்கோடு: கேரளாவில், 15 வயது மாணவி மற்றும் அவருடன் மாயமான 42 வயது டிரைவரின் உடல்கள், 25 நாட்களுக்குப் பின், துாக்கில் தொங்கிய நிலையில், 'ட்ரோன்' உதவியுடன் மீட்கப்பட்டன.

கேரளாவின் காசர்கோடு அருகே கய்யார் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த, 15 வயதான, 10ம் வகுப்பு பள்ளி மாணவி ஷ்ரேயா, 25 நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். அவரை பல இடங்களிலும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர்; காணாததால், போலீசில் புகார் அளித்தனர்.

அந்த மாணவி மாயமான நாளில் இருந்தே, அந்த சிறுமியின் வீட்டினருக்கும், சிறுமிக்கும் நன்கு அறிமுகமான பிரதீப், 42, என்ற டிரைவரையும் காணவில்லை. டிரைவரை காணவில்லை என அவரின் நீண்டகால தோழி, போலீசில் புகார் அளித்த பிறகே, மாணவியுடன் அந்த டிரைவர் ஓடியது தெரிய வந்தது.

விசாரணை



இருவரையும் தேடி, 100க்கும் மேற்பட்ட போலீசார், 'ட்ரோன்'கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் பல நாட்களாக தேடி வந்தனர். அந்த சிறுமிக்கு நெருங்கிய சொந்தம் என யாரும் இல்லாததால், அந்த டிரைவரின் உறவினர்கள் வசித்த இடங்களில் போலீசார் இரவு பகலாக சோதனை நடத்தினர். எனினும், கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமி, டிரைவரின் உடல்கள், சிறுமியின் வீடு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்த மரம் ஒன்றில் துாக்கில் தொங்கிய நிலையில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவர்களை தேடி, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் சென்ற போலீசார், வீடு அருகே இருந்த காட்டுப்பகுதியை சோதனையிட மறந்து விட்டனர்.


மாணவிக்கு நன்கு பழக்கமான அந்த டிரைவர், வலுக்கட்டாயமாக அவரை கடத்திச் சென்றாரா அல்லது இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போயினரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

டி.என்.ஏ., சோதனை



மாயமான அன்றே அவர்கள் இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்திருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்திய போன் பேட்டரி சார்ஜ் தீர்ந்து போய், 18 நாட்களுக்கும் மேலாகி இருந்தது. அதிலிருந்த, 70க்கும் மேற்பட்ட அழைப்புகளை அந்த மாணவியின் தந்தை செய்திருந்தார் என போலீசார் கூறினர்.


மகளை திடீரென காணாததால், அவரை தேடி, போன் அழைப்புகளை தொடர்ந்து செய்த அவர், போன் ஸ்விட்ச் ஆப் ஆன நிலையில் அப்படியே இருந்து விட்டார். இருவர் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போயிருந்ததால், டி.என்.ஏ., சோதனை நடத்தி, அவர்களை உறுதிப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement