இன்ஸ்பயர் விருதுக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

மேட்டுப்பாளையம் : மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இன்ஸ்பயர் விருது வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி மெர்சில்டா, மாணவன் அன்பு ஆகிய இருவருக்கு இன்ஸ்பயர் விருது பெற தேர்வு பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை பத்திரம்மாள் கூறுகையில், 'இன்ஸ்பயர் விருதுக்கு, தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில், 10 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும், சான்றிதழ் வழங்கப்படும்,' என்றார்.

வழிகாட்டி ஆசிரியர் திருமுருகன் கூறுகையில், 'மெர்சில்டா என்ற மாணவி, வெள்ளம் பாதித்த பகுதிகளில் நீரில் மூழ்காமல், தானாகவே உயர்ந்து கொள்ளும் சிறப்பு வகையான பாலம், கட்டமைப்பதற்கான செயல் திட்டத்தை உருவாக்கி, காட்சிக்கு வைத்து விளக்கிக் கூறினார்.

மாணவன் அன்பு, ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில், தானாகவே திறந்து மூடும் வகையான கேட் அமைப்பினை, கட்டமைப்பதற்கான செயல் திட்டத்தை உருவாக்கினார்' என்றார்.

வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரையும், காரமடை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவசங்கரி ஆகியோர் பாராட்டினர்.

இதேபோன்று சிறுமுகை அருகே இரும்பறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த இந்துஸ்ரீ என்ற மாணவிக்கும் இன்ஸ்பயர் விருது கிடைத்துள்ளது.

இந்த மாணவியை பள்ளி தலைமை, ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினார்.

Advertisement