'பெட்டி'யுடன் வந்தால் 'வடக்கில்' வேலை நடக்கும் வா! சிட்டிக்குள் தலையெடுக்குது எடக்கு மடக்கான 'ஸ்பா'
பணி நிமித்தமாக கார்ப்பரேஷன் ஆபீசுக்கு சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் சென்றனர். டவுன்ஹாலை கடந்தபோது, கோனியம்மன் கோவில் முன், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மித்ரா, ''என்னக்கா... கோனியம்மன் கோவில் திருவிழாவுக்கு போயிருந்தீங்களே... ஏதாச்சும் சொ ல்ற மாதிரி தகவல் இருக்குதா...'' என, கேட்டாள்.
''மித்து! கோனியம்மன் தேர்த்திருவிழாவுல வழக்கத்தை விட இந்த வருஷம் பக்தர்கள் கூட்டம் அதிகமா இருந்துச்சு. ஆன்மிக நிகழ்ச்சியில கலந்துக்கிறதுக்கு, ஆபீசர்ஸ் சிலர் தயக்கம் காட்டுனாங்க. ஆனா, ஆளுங்கட்சி தரப்புல மேயரும், மாவட்டங்களும் கலந்துக்கிட்டு, தேர் வடத்தை பிடிச்சு, விழாவை துவக்கி வச்சாங்க...''
''மகளிர் போலீஸ் தரப்புல சீர் வரிசை கொடுத்தாங்களாமே...''
''அதுவா... வழக்கமா, பி1 போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து, ஊர்வலமா போயி, அம்மனுக்கு சீர் வரிசை கொடுப்பாங்க. இந்து சமய அறநிலையத்துறை ஆபீசர்ஸ், ஸ்டேஷனுக்கு போயி, இன்ஸ்.,க்கு பரிவட்டம் கட்டி, அழைச்சிட்டு வருவாங்க...'' என்றபடி, விக்டோரியா ஹால் பின்புறம் ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.
'வெயிட்டிங் லிஸ்ட்'
''இன்ஸ்., ஒருத்ததரை 'வெயிட்டிங் லிஸ்ட்'டுல வச்சிட்டாங்களாமே...''
''ஆமாப்பா... கட்டப்பஞ்சாயத்து செஞ்சு, கரன்சியை அள்ளுன இன்ஸ்.,களை 'தண்ணீ இல்லாத காட்டுக்கு' மாத்துறதுக்கு பதிலா, கரன்சி மழை பொழியுற ஸ்டேஷனுக்கு மாத்தியிருந்தாங்க; அவுங்க ரொம்ப குஷியா இருந்தாங்க. இதைப்பத்தி, போன வாரம் நாம ரெண்டு பேரும் பேசுன விஷயம், போலீஸ் கமிஷனர் காதுக்கு போயிருக்கு... அவரும் 'என்கொயரி' செஞ்சதுல நாம பேசுனது உண்மைன்னு தெரிஞ்சதும், ஒரு இன்ஸ்.,சை 'வெயிட்டிங் லிஸ்ட்'டுல வச்சிருக்காரு; மத்த ரெண்டு பேர் மேல கண்காணிப்பு தீவிரமா இருக்குதாம். சிட்டி லிமிட்டுல இருக்கற போலீஸ்காரங்க மேல கம்ப்ளைன்ட் வந்தா, ஆக் ஷன் கடுமையா எடுக்குறாராம்...''
'ஸ்பா' விபச்சாரம்
''அதெல்லாம் இருக்கட்டும்... பியூட்டி பார்லர்', 'ஸ்பா'ங்கிற பெயரில விபச்சாரம் நடக்குதாமே... அதைப்பயன்படுத்திக்கிட்டு ஒரு குரூப் கலெக்சன்ல ஈடுபடுதாமே...''
''ஆமா, மித்து! கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிட்டி லிமிட்டுக்குள்ள போலீஸ்காரங்க அதிரடி சோதனை நடத்தி, ஏகப்பட்ட பேரை அரெஸ்ட் பண்ணாங்க. சட்ட விரோதமா செயல்பட்ட 'ஸ்பா'க்களை மூடுனாங்க. இருந்தாலும், வடவள்ளி, ராமநாதபுரம், சாய்பாபா காலனின்னு சில இடங்கள்ல இன்னமும் 'பியூட்டி பார்லர்', 'ஸ்பா'ங்கிற பெயரில விபச்சாரம் நடக்குது.
காவல்துறைக்காக 'குரல்' கொடுக்கறதா சொல்லிக்கிட்டு, வலம் வர்ற சில போலி நிருபர்கள், மாதந்தோறும் மாமூல் வசூலிச்சிட்டு இருந்திருக்காங்க. அந்த சமயத்தில, அங்க இருந்த லேடீஸ்களுடன் பழக்கம் ஏற்பட்டு, இப்போ, அவுங்களை வச்சு, தனியா பிசினஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம். எந்த ரூபத்துல நடவடிக்கை எடுக்கறதுன்னு போலீஸ்காரங்க யோசிச்சிட்டு இருக்காங்க...''
இருவரும் பேசிக்கொண்டே அருகாமையில் உள்ள உணவகத்துக்குள் சென்றனர். அங்கிருந்த ஆபீசர் ஒருத்தரிடம் மித்ரா கிசுகிசுத்தாள்.
லஞ்சத்துக்கு பட்டியல்
ஆபீசரிடம் பேசி விட்டு வந்த மித்ரா, ''மின் இணைப்பு வாங்கணும்னா, லஞ்சம் கொடுக்கணும்னு லிஸ்ட் போட்டு கலெக்சன் பண்றாங்களாமே...'' என கேட்டாள்.
''அதுவா... குறிச்சியில இருக்கற மின்வாரிய உயரதிகாரி பெயரைச் சொல்லி கலெக்சன் பண்றாங்க. அவருக்கு தெரியுமோ, தெரியாதோ... ஆனா, அவருக்கு கொடுக்கணும்னு சொல்லி, மின் இணைப்பு கேட்டு வர்றவங்கள்ல பணம் பறிக்கிறாரு, சபரிமலை ஆண்டவனின் பெயர் கொண்ட மின் ஊழியர்,''
''அதாவது, புது மின் இணைப்புக்கு, 5,000 ரூபாய், இணைப்பை வேறிடத்துக்கு மாத்துறதுக்கு, 2,000 ரூபாய், 'த்ரி பேஸ்' இணைப்பு வேணும்னா, 10 ஆயிரம் ரூபாய், அடிஷனல் லோடு கொடுக்கறதுக்கு, 7,000 ரூபாய் வசூலிக்கிறாரு. அவரு, ஏற்கனவே கோவைப்புதுார்ல இதே மாதிரி, கலெக்சன் பண்றதா கம்ப்ளைன்ட் வந்ததும் குறிச்சிக்கு டிரான்ஸ்பர் செஞ்சிருக்காங்க. இப்போ, இங்கேயும் வாலாட்ட ஆரம்பிச்சிட்டாராம். மின் வாரிய உயரதிகாரியிடம் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க; நடவடிக்கை எடுக்குறாங்களான்னு பார்ப்போம்...''
ஆபீசருக்கு 'கவனிப்பு'
''அக்கா.... இதெல்லாம் பரவாயில்லை. வடக்கு தாலுகா ஆபீசுல வேலைபார்க்குற உதவியாளர் ஒருத்தரு செஞ்ச காரியத்தை கேள்விப்பட்டீங்கன்னா... ஆடிப் போயிருவீங்க... இதெல்லாம்... புது கலெக்டர் கவனத்துக்கு போச்சான்னே தெரியலை...''
''ஏம்ப்பா... அப்படி என்ன நடந்துருச்சு...''
''அதுவா... வடக்கு தாலுகா ஆபீசுல வேலை பார்க்குற அந்த உதவியாளர், சூலுார்ல இருந்த டூட்டிக்கு வர்றாராம். ரொம்ப சிரமப்படுறாராம்; அதனால, சூலுார் தாலுகாவுக்கே 'டிரான்ஸ்பர்' கொடுங்கன்னு, கலெக்டர் ஆபீசுல இருக்கற உயரதிகாரிகிட்ட கோரிக்கை வச்சிருக்காரு. அவரோ, கண்டுக்காம கடந்து போயிட்டாரு...''
''அதனால... 'சார்... உங்களுக்கு என்ன வேணும்னாலும் செஞ்சு கொடுக்கிறேன்; உங்களை நல்லா கவனிக்கிறேன். 'டிரான்ஸ்பர்' ஆர்டர் மட்டும் போட்டுக் கொடுங்க'கன்னு கேட்டிருக்காரு. நல்லா கவனிக்கிறேன்னு சொன்னதை கேட்டு, அந்த ஆபீசர் கோபத்தின் உச்சிக்கே போயிட்டாரு. உதவியாளருக்கு 'வார்னிங்' கொடுத்து அனுப்பி வச்சிருக்காரு. கலெக்டர் ஆபீஸ் முழுக்க இதே பேச்சா இருக்கு...''
சனிக்கிழமை மேளா
''மித்து, வடக்கு தாலுகா ஆபீசே, கரெப்ஷனுக்கு பெயர் போன ஆபீஸ். கவர்மென்ட் ஆபீசுல அதிகம் லஞ்சம் வாங்கற ஆபீசுக்கு விருது கொடுக்கணும்னா வடக்கு தாலுகாவுக்கு கொடுக்கணும். வாரந்தோறும் சனிக்கிழமை ரியல் எஸ்டேட் அதிபர்கள் கூட்டம் நிரம்பி வழியுது. ரெவின்யூ டிபார்ட்மென்ட் ஆபீசர்ஸ் அத்தனை பேரும் வர்றாங்க; கடமையை கச்சிதமா செஞ்சு கொடுக்கறாங்க,''
''மத்த நாட்கள்ல வருவாய்த்துறையின் மத்த சேவையை செய்றாங்க... சனிக்கிழமை மட்டும் ரியல் எஸ்டேட் அதிபர்களின் கோரிக்கையை, 'ஸ்பாட்'டுலேயே நிறைவேத்திக் கொடுத்து, 'பை'யை நிரப்புறாங்களாம். அன்னைக்கு கரன்சி மழை கொட்டுதாம். அதுல கொஞ்சத்தை, கலெக்டர் ஆபீஸ் ஆபீசருக்கும் கொடுக்கலாம்னு அந்த உதவியாளர் நெனைச்சிருப்பாரு,''
கலெக்சனுக்கு 'ரூட்'
''அடக்கொடுமையே...'' என்ற மித்ரா, ''சிட்டி லிமிட்டுக்குள்ள இருக்கற போலீஸ்காரங்களை ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன், டிரான்ஸ்பர் செஞ்சிருக்காங்களாமே...''
''ஆமாப்பா... அதெல்லாம் வழக்கமானதுன்னு சொல்றாங்க. மூனு வருஷத்துக்கு ஒரு தடவை டிரான்ஸ்பர் செய்றது வழக்கமாம். ஆனா, கலெக்டர் ஆபீசுல மூனு வருஷத்துக்கு மேல நிறைய ஆபீசர்ஸ் வேலை பார்க்குறாங்களாம்; அவுங்கள இன்னும் இட மாறுதல் செய்யாம கவர்மென்ட் வேடிக்கை பார்த்துட்டு இருக்குன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க...''
''ஆமாக்கா... நீங்க சொல்றது கரெக்ட்டுதான்! ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிஞ்சதுனால, ஆபீசர்ஸ் ராஜ்ஜியம் நடந்துட்டு இருக்குது. மனையை வரன்முறை செய்றதுல வசூல்ல பட்டைய கெளப்புறாங்க.
எந்தெந்த 'ரூட்'டுல கலெக்சன் பண்ணலாம்னு 'ரூட்' போட்டு வசூலிக்கிறாங்க. வாங்க வேண்டிய இடத்துல வாங்கி, கொடுக்க வேண்டிய இடத்துல பக்குவமா சேர்க்குற வேலையை செய்றாங்களாம்,'' என்றபடி, அருகாமையில் உள்ள பேக்கரிக்குள் நுழைந்தாள் சித்ரா.
ரோஸ் மில்க் ஆர்டர் கொடுத்த மித்ரா, ''அதெல்லாம் இருக்கட்டும்... பாரஸ்ட் டிபார்ட்மென்ட்காரங்களை பார்த்தா விவசாயிகள் பயப்படுறாங்களாமே... என்னாச்சு...'' என, கேட்டாள்.
''அதுவா... மலையோர கிராமங்கள்ல வன விலங்குகள் நடமாட்டம் ஜாஸ்தியா இருக்கு. விவசாய தோட்டத்துல சேதம் ஏற்பட்டுச்சுன்னு சமூக வலைதளத்துல விவசாயிகள் பதிவு போட்டா... அவுங்க யாருன்னு பாரஸ்ட் டிபார்ட்மென்ட்டுக்காரங்க 'நோட்' பண்ணிக்கிறாங்க. இழப்பீடு கேட்டு போனா... அவுங்களை மட்டும் அலைக்கழிக்கிறாங்களாம். நேருக்கு நேராகவே... 'எதுக்கு... சமூக வலைதளத்துல பதிவிடுறீங்க'ன்னு கேட்டு மிரட்டுறாங்களாம். அதனால, வடக்கு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயப்படுறாங்க...''
கான்ட்ராக்டர்ஸ் புலம்பல்
''கார்ப்பரேஷன் கான்ட்ராக்ட்டுகளை 'டீல்' பேசுற மாதிரி, மேட்டுப்பாளையம், காரமடை நகராட்சியிலும் டெண்டர் எடுக்கற 'ஒர்க்'குகளை மூன்றெழுத்து ஊரை சேர்ந்த டீம் முடிவு செய்யுதாமே...''
ரோஸ் மில்க் பருகிய சித்ரா, ''ஆமா, மித்து! நம்ம மாவட்டத்துல அதுதான் எழுதப்படாத சட்டமாம். எந்த டிபார்ட்மென்ட்டா இருந்தாலும், எந்த வேலையா இருந்தாலும் மூன்றெழுத்து டீம்-ஐ சந்திச்சு பேசணுமாம்; அவுங்க, 'ஓகே' சொன்னா, டெண்டர் கொடுப்பாங்களாம். டெண்டர் கிடைக்காத கான்ட்ராக்டர்கள் புலம்பிட்டு இருக்காங்க,'' என்றாள்.
மேயருக்கு அழைப்பில்லை
''கார்ப்பரேஷன்னு சொன்னதும் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. மேயருன்னு ஒருத்தர் இருப்பாங்களே... இருக்காங்களா...''
''அதையேன் கேக்குற... மேயருக்கும்... ஆபீசர்களுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்கு. மசக்காளிபாளையம் ஸ்கூல்ல ஆண்டு விழா நடக்கப் போகுது. சிறப்பு விருந்தினரா, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை கூப்பிட்டுருக்காங்க. இந்த விழாவுக்காக, நோட்டீஸ் அச்சடிச்சிருக்காங்க...''
''கமிஷனர் பெயரையும், சிறப்பு விருந்தினர் பெயரையும் முதன்மையா அச்சடிச்சிருக்காங்க. கிழக்கு மண்டல தலைவி, கல்விக்குழு தலைவர் பெயரை குறிப்பிட்டிருக்காங்க.
ஆனா, மேயர் பெயரை குறிப்பிடாம தவிர்த்திருக்காங்க. இதெல்லாம் தற்செயலா நடந்துச்சா... அல்லது திட்டமிட்டே மேயர் பெயரை தவிர்த்திருக்காங்களான்னு 'என்கொயரி' பண்ணணும்...''
''கார்ப்பரேஷன் ஸ்கூல் ஆண்டு விழாவுக்கு அழைப்பிதழ் அடிக்கிறதா இருந்தாலும், நோட்டீஸ் அச்சடிக்கிறதா இருந்தாலும், மெயின் ஆபீஸ்ல ஒப்புதல் வாங்கணும்.
மேயருக்கு அழைப்பு இல்லாமல், அவரது பெயர் இல்லாம நோட்டீஸ் அச்சடிக்க யாரு ஒப்புதல் கொடுத்ததுன்னு, கார்ப்பரேஷன்ல புகைச்சல் ஓடிட்டு இருக்கு...''
மைக்கில் வறுத்தெடுப்பு
பில் தொகையை கொடுத்து விட்டு வெளியே வந்த மித்ரா, ''கார்ப்பரேஷன் பில் கலெக்டர்களை மைக்கில் கூப்பிட்டு தாறுமாறா திட்டுறாங்களாமே...'' என, கேட்டாள்.
''அதுவும்... உண்மைதான்! பைனான்ஸியல் இயர் முடியறதுக்கு, 20 நாள் இருக்கு. அதுக்குள்ள சொத்து வரி வசூல், 90 சதவீதத்தை தாண்டனும்னு நெனைக்கிறாங்க. அதனால, பில் கலெக்டர்களுக்கு நெருக்கடி கொடுக்குறாங்க. கிழக்கு மண்டலத்தை சேர்ந்த ஆபீசர் ஒருத்தரு, ரொம்பவும் மோசமா நடந்துக்கிறதா பேசிக்கிறாங்க...''
''ரெண்டு நாளைக்கு முன்னாடி, செம்மொழி பூங்கா கட்டுற இடத்துக்கு போயிருந்தேன். துணை கமிஷனர் ஒருத்தரும், இன்ஜி., செக்சன் ஆபீசர் ஒருத்தரும் பேசிக்கிட்டு இருந்ததை கேட்க முடிஞ்சது... 'ரெண்டு இடத்துல குடிநீர் இணைப்பை துண்டிச்சா... ஜனங்க... ஓடோடி வந்து... வரியை கொட்டுவாங்க... ஆனா... கனிவா பேசனும்னு சொல்றீங்க... எப்படி... கலெக்சன் ஆகும்'ன்னு கமென்ட் அடிச்சாரு இன்ஜி., செக்சன் அதிகாரி. அவரு கமிஷனருக்கு வேண்டப்பட்ட அதிகாரிங்கிறதுனால, துணை கமிஷனர் எந்த கருத்தும் சொல்லாம அமைதியா இருந்தாரு...''
வேலைக்கு 'டீல்'
''ரேஷன் கடை வேலைக்கு விண்ணப்பம் வாங்குனாங்களே... ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க பேரம் பேசுறதா சொல்றாங்க... உண்மைதானுங்களா...''
''வெளியே எந்த தகவலும் கசியுமாப்பா... அப்பாயின்மென்ட் வேணும்னா, எட்டு 'ல'கரம் கொடுக்கணும்னு விண்ணப்பதாரர்களிடம் பேரம் பேசியிருக்காங்க. அதுல, டோக்கன் அமவுன்ட் வாங்கிட்டாங்களாம். இப்போ, டிபார்ட்டுமென்ட்டுல இருக்கற முக்கிய புள்ளி ஒரு லிஸ்ட் கொடுத்திருக்காராம்; மூன்றெழுத்து ஊர்க்காரர் ஒரு லிஸ்ட் கொடுத்திருக்காராம்.
எந்த லிஸ்ட்டுல இருக்கறவங்களை, பணி நியமனம் செய்றதுன்னு தெரியாம கூட்டுறவு துறை ஆபீசர்ஸ் தவியாய் தவிக்கிறாங்களாம். செலக்சன் லிஸ்ட் எப்போ வெளியாகும்னு லஞ்சம் கொடுத்தவங்க 'வெயிட்' பண்ணிட்டு இருக்காங்க...'' என்றபடி, கார்ப்பரேஷன் அலுவலகத்துக்குள் நுழைந்தாள் சித்ரா.
பின்தொடர்ந்து வந்தாள் மித்ரா.
மேலும்
-
நெஞ்சு வலி: எஸ்.ஐ., சாவு
-
இந்தியாவுக்கு வருகை தருகிறார் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி; அவர் சொல்வது இது தான்!
-
கோவையில் அச்சுறுத்திய சிறுத்தை; பிடிபட்டதால் மக்கள் நிம்மதி!
-
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு 'அலெர்ட்': காலை முதல் கொட்டும் மழை!
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,