நாட்டை ஆள்வோருக்கு எந்த தகுதி தேர்வும் கிடையாது: சீமான் ஆவேசம்

1

கோவை : “இந்த நாட்டில் மட்டும் தான், எந்த தகுதியுமே இல்லாதவர் நாட்டை ஆளும் தகுதி பெற முடியும்,” என கோவையில் சீமான் தெரிவித்தார்.


கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோமா, எதிர்க்கிறோமா என்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும். கல்வி சுகமாக இருக்க வேண்டுமே தவிர, சுமையாக இருக்கக்கூடாது. மதிப்பெண்ணை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியாக இருக்காது.

கல்வி வியாபாரம்



அனைத்துக்கும் தேர்வு வைக்கின்றனர்; நாட்டையே நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் தேர்வு எழுதுவதில்லை. இந்த நாட்டில் மட்டும் தான், எந்த தகுதியுமே இல்லாதவர் நாட்டை ஆளும் தகுதி பெற முடியும்.

ஒரு வக்கீல் நீதிபதியாகவும், மருத்துவம் படிக்கவும், கலெக்டராகவும், அதிகாரிகளாகவும் தேர்வு எழுத வேண்டும். ஆனால், நாட்டை ஆள, எந்த தேர்வும் எழுத வேண்டாம்.

கல்வியை வியாபாரமாக்கி விட்டு, சம கல்வி சம உரிமை பேசுவது சரியல்ல. ஏழைக்கு ஒரு கல்வி; பணக்காரனுக்கு ஒரு கல்வி. சமச்சீர் கல்வி என சொல்லிவிட்டு, கல்வியை வியாபாரப் பொருளாக்கி விட்டனர்.

எங்கு நின்றாலும் நான் தனித்து நிற்பேன். கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என கேட்பர். ஆனால், கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என யாரையும் கேட்பதில்லை.

தொப்பி போட்டு வேடம்



என் கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லலாம். அவர்கள் குறித்து ஒரு நாளும் கவலைப்பட மாட்டேன். தொகுதி சீரமைப்பு என அறிவித்தபோதே, எதிர்ப்பு தெரிவித்தேன். தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு பேச ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன; அக்கூட்டத்தால் எந்த பலனும் இல்லை.

மக்கள் தொகை 40 கோடியாக இருந்த போது, 543 என்ற எண்ணிக்கையில் எம்.பி.,க்கள் தொகுதி இருந்தன. இன்று, 150 கோடியாக மக்கள் தொகை உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, பிரதிநிதிக்கான எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு எம்.பி., தொகுதியாக மறு சீரமைக்க வேண்டும்.

இங்கு ஆட்சியில் இருப்போர் காசு கொடுத்து ஓட்டு வாங்கி, மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களின் வாழ்வு, நலம், எதிர்காலம், பாதுகாப்பு பற்றி எந்த கவலையும் இல்லை.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒருநாள் தொப்பி போட்டு வேடம் போடுகிறார். மக்களின் உணவுக்காக அல்ல, உணர்வுகளுக்கான உரிமைக்கானவன் நான். இப்படியெல்லாம் வேஷம் போடுவது விஜய்க்கு பிடித்திருக்கிறது; அதனால் செய்கிறார். யாருக்கும் பாதிப்பில்லை; விட்டு விடலாம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

விலையை உயர்த்து!

தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என, தேர்தல் நேரத்து தந்திரமாக பொய் வாக்குறுதி அளித்து, இன்று வரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால், கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் ஆதார விலையைக் கூடவா, தி.மு.க., அரசால் நிர்ணயிக்க முடியவில்லை. இதில், அரசுக்கு என்ன தயக்கம் உள்ளது. மத்திய அரசு வழங்கும் 3,150 ரூபாய் கொள்முதல் விலையை மட்டுமே வழங்குவது, விவசாயிகளுக்கு செய்யும் கொடுஞ்செயலாகும். எனவே, மத்திய அரசு 5,000 ரூபாய் வழங்குவதுடன், மாநில அரசு பங்காக 1,000 ரூபாய் சேர்த்து, 6,000 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்.-சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்

Advertisement