ரூ.318க்கு சமையல் காஸ் வழங்கப்படும்

விழுப்புரம் : திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பொது நிழல் பட்ஜெட்டை வெளியிட்டார்.

மக்களுக்கான திட்டங்களை வகுப்பது மற்றும் பட்ஜெட் அறிக்கை தயாரிப்பதில், மாநில அரசுக்கு யோசனை வழங்கும் நோக்கத்தில், பா.ம.க., சார்பில், 2003-2004ம் ஆண்டு முதல் நிழல் பட்ஜெட் தயாரித்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டு 23வது நிழல் பட்ஜெட் அறிக்கையை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று வெளியிட்டார்.

பா.ம.க., நிழல் பெட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

கல்வி, மருத்துவத்திற்கான நிதியை அதிகரிப்பது, நிதிப்பற்றாக்குறை 25,536 கோடியாக இருக்கும். 71,855 கோடி ரூபாயிற்கு மூலதன செலவுகள் செய்யப்படும். இந்த ஆண்டு, 2.50 லட்சம் பேருக்கு அரசு வேலையும், அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 80 சதவித இட ஒதுக்கீட்டின் படி 1 கோடி பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கல்வி, மருத்துவம், விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பது, கல்வி, மருத்துவத்திற்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மே மாதம் 1ம் தேதி முதல் மதுவிலக்கு, இரு மொழி கொள்கை தொடரும். தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லுாரி அமைக்கப்படும். தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். ரூ 318க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். டி.என்.பி.எஸ்.சி., க்கு நிலையான தேர்வு அட்டவணை உருவாக்கப்படும். பஸ் கட்டணம் உயர்த்தப்படாது. கோயம்பேடு பஸ் முனையம் பூங்காவாக மாற்றப்படும். கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும்.

மேகதாது அணை கட்டுவது தடுக்கப்படும்.

மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும். கல்வி, வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் உள்ளிட்ட 109 தலைப்புகளில் 359 யோசனைகளை அரசுக்கு தெரிவித்து, நிழல் பட்ஜெட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் அமைச்சர் மூர்த்தி, சிவக்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement